/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடையால் பாதிக்கப்படும் பள்ளிச்சூழல் அப்புறப்படுத்த அரசு அலட்சியம்
/
மதுக்கடையால் பாதிக்கப்படும் பள்ளிச்சூழல் அப்புறப்படுத்த அரசு அலட்சியம்
மதுக்கடையால் பாதிக்கப்படும் பள்ளிச்சூழல் அப்புறப்படுத்த அரசு அலட்சியம்
மதுக்கடையால் பாதிக்கப்படும் பள்ளிச்சூழல் அப்புறப்படுத்த அரசு அலட்சியம்
ADDED : மே 12, 2025 11:43 PM

உடுமலை, ; உடுமலை அண்ணா பூங்கா அருகே உள்ள மதுக்கடையால், அப்பகுதியிலுள்ள பள்ளி, அங்கன்வாடி மையங்களின் சூழல், பாதுகாப்பில்லாத நிலைக்கு மாறி வருகிறது.
உடுமலையிலுள்ள பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில்,
நகராட்சி சந்தை, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் போன்றவை அமைந்துள்ளன.
இதனால், இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும், இந்த ரோட்டில், அண்ணா பூங்கா அருகே 'டாஸ்மாக்' மதுக்கடை ஒன்று உள்ளது. பரப்பரப்பான சூழலாகவும், பொதுமக்கள் அதிகம் கடந்து செல்லும் பகுதியாக இந்த ரோடு உள்ளது.
அதேபோல், அருகில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகமும் உள்ளன.
இந்தப்பகுதியில், மதுக்கடை இருப்பதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், அரசியல் பிரமுகர்களின் ஆதரவால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் தான் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னை மக்களுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது. விடுமுறை நாட்களின்போது, அவ்வழியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படும் வகையில், 'குடி'மகன்கள் அரைகுறை ஆடையுடன் ரோட்டில் இருப்பதும், கூட்டமாக நின்று கொண்டிருப்பதும், அவ்வழியாக செல்வோருக்கு பீதியை ஏற்படுத்துகிறது.
மேலும் பள்ளி, அங்கன்வாடி மையத்தின் முன்பு காலை நேரத்திலேயே, சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடக்கின்றனர். இதனால் பள்ளி, அங்கன்வாடி மையத்தின் சூழலும் பாதிக்கப்படுகிறது.
பிரதான ரோட்டில் மாலை நேரத்தில், வாகனங்கள் கடக்க முடியாத வகையில் இந்த கடையால் பிரச்னை ஏற்படுகிறது.
'குடி'மகன்கள் நிதானமில்லாமல், அவ்வழியாக செல்லும் வாகனங்களின் முன்பு திடீரென விழுகின்றனர். இதனால் விபத்துகளும் அதிகம் நடக்கிறது. அங்கு குடியிருக்கும் மக்கள், விடுமுறை நாட்களிலும் நிம்மதியாக வெளியில் செல்ல முடியாத வகையில், பாதுகாப்பில்லாத சூழலாக உள்ளது.
அப்பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை அப்புறப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பொதுமக்கள் நிம்மதியுடன் இருக்க முடியுமென அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.