/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டம் விடும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு!
/
பட்டம் விடும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு!
ADDED : மார் 22, 2025 11:04 PM
''கல்வி... இன்று அனை வருக்குமான ஒன்றாகி விட்டது. ஆனால், ஒரு காலத்தில் பள்ளிக்கல்வியில் கரை சேர்வதே, சவால் நிறைந்ததாக இருந்தது. அதுவும், கல்லுாரி கல்வி என்பது, வெறும் கனவோடு கரைந்து போன ஏமாற்றத்தையும் பலர் அனுபவித்திருக்க முடியும். இதற்கு ஏழ்மை, வறுமை, பொருளாதார நெருக்கடி, கல்வி குறித்த முக்கியத்துவம் உணராமை என பல காரணங்கள் உண்டு.
ஆனால், இன்று, வறுமை நிலையில் உள்ளோர் கூட தங்கள் பிள்ளைக்கு தரமான கல்வி வழங்குவதில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். அதன் தாக்கம், முதல் தலைமுறை பட்டதாரிகளாக பலரும் உருவெடுத்து வருகின்றனர்.
கடினமான வாழ்க்கை சூழலிலும் சளைக்காமல், சலிக்காமல் கல்வி பயின்று, மூன்றாம் ஆண்டின் இறுதியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில், கருப்பு அங்கியும், கருப்பு தொப்பியும் அணிந்து, பெற்றோர், சக மாணவர்கள் நிரம்பி வழியும் அரங்கில், கரகோஷம் அரங்கு அதிர, கல்லுாரி வேந்தர்களின் கையில் பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழை பெறும் போது, அந்த மாணவ, மாணவியர் பெரும் சந்தோஷம் என்பது, அவர்கள் வாழ்நாள் சாதனையின் முதல் படி என்றே சொல்லலாம். ஆனால் அவர்களது பெற்றோருக்கோ, தங்கள் வாழ்நாள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுவர்.
பட்டமளிப்பு விழாக்களும், பட்டமளிப்பு விழாக்களின் போது தங்கள் பிள்ளைகள் அணியும் கருப்பு அங்கியும், நெகிழ்ச்சியான மனநிலையை மாணவ, மாணவியருக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஏற்படுத்தும். இந்த மனநிலையை உணர்ந்தோ, உணராமலோ, இன்று, நர்சரி படிப்பு முடிக்கும் பால் மணம் மாறாத குழந்தைகளுக்கு கூட பட்டமளிப்பு விழா நடத்துகின்றன பள்ளி நிர்வாகங்கள்.
இதில் உச்சி குளிர்ந்தும் போகின்றனர், பெற்றோர்கள்.
கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது; கல்லுாரி மாணவ, மாணவியர் பெறும் பட்டம் என்பது, அவர்களது படிப்புக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்பத்துக்கே பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். கல்லுாரி நிர்வாகங்கள், கல்லுாரி வேந்தர்களாக உள்ள ஆளுனர்களின் தேதிக்காக பல நாட்கள், பல மாதங்கள் காத்திருந்து, அவர்களது கையால் மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்குவதை தான், விழாவின் நிறைவாக கருதுவர்.
அந்தளவு முக்கியத்துவம் பெற்ற பட்டமளிப்பு விழாக்கள், இன்று பள்ளிகள் அளவிலும் உருவெடுத்திருக்கிறது. குழந்தைகளை ஊக்குவிக்கவும், தங்கள் பள்ளியின் பெருமையை பறைசாற்றவும் இத்தகைய நிகழ்வுகளை பள்ளி நிர்வாகங்கள் நடத்தினாலும், பட்டமளிப்பில் உள்ள, உள்ளார்ந்த அர்த்தத்தை பெற்றோருக்கும், மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்தினால், உயர்கல்வி பயின்று பட்டம் பெறும் ஆவல், சிறு வயதிலேயே மாணவ, மாணவியரின் மனதில் பதியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.