ADDED : ஜன 15, 2024 12:24 AM
உடுமலை:பயன்பாடு இல்லாமல் வீணாகும், உணவு தானிய கிடங்கு கட்டடத்தை மாற்று பயன்பாட்டுக்காக, ஒன்றிய நிர்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.வி., புரத்தில், 2014 - 15ம் ஆண்டில், ஊராட்சி உணவு தானிய கிடங்கு கட்டடம் கட்டப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம், தற்போது பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. கட்டுமானப்பணிகள் முடிந்தது முதலே பயன்பாடு இல்லாமல், கட்டடம் வீணாகி வருகிறது.
உடுமலை ஒன்றிய நிர்வாகம், இக்கட்டடத்தை ஊராட்சி சார்ந்த பிற பணிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பல லட்ச ரூபாய் அரசு நிதி வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.