/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராவல் மண் திருட்டு; பாறைக்குழியான குளம்
/
கிராவல் மண் திருட்டு; பாறைக்குழியான குளம்
ADDED : செப் 01, 2025 10:51 PM

பொங்கலுார்; மாதப்பூரில் உள்ள குளம் அப்பகுதி விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்து வந்தது. குளத்தில் பல ஆண்டுகள் பழமையான வேப்ப மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக போதிய மழை இல்லை.
குளத்திற்கு நீர் வரத்து குறைந்ததால் வண்டல் மண்ணே இல்லை. வண்டல் மண் இல்லாத குளத்தில் மண் எடுப்பதாக சிலர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் வண்டல் மண் வெட்டி எடுப்பதாக கூறி சட்டத்திற்கு புறம்பாக கிராவல் மண்ணை வெட்டி எடுத்து நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அதிகாரிகளும் இந்த முறைகேடுகளுக்கு துணை நின்றனர்.
ஆளுயரத்திற்கு கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டதால் மரத்தின் வேர் பகுதி பலத்த சேதம் அடைந்தது. பல மரங்கள் தற்போது அந்தரத்தில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மண் இல்லாததால் அங்கிருந்த வேப்ப மரங்கள் தற்போது காய்ந்து வருகின்றன. மீதமுள்ள மரங்களும் விரைவில் பட்டு போகும் அபாயத்தில் உள்ளது. தற்போது பாறைக்குழியாக அந்தக் குளம் மாறிவிட்டது.
பொங்கலுார் வட்டார விவசாயிகள் சிலர் கூறுகையில், 'பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து முறைகேடுகளுக்கு துணை போன அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் இயற்கை வளங்கள் அழியாமல் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல முடியும்,' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.