/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 10ல் குறைகேட்பு கூட்டம்: தயாராக விவசாயிகள்
/
வரும் 10ல் குறைகேட்பு கூட்டம்: தயாராக விவசாயிகள்
ADDED : செப் 07, 2025 09:14 PM
உடுமலை; மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் தலைமையில், வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அடுக்கடுக்கான பிரச்னைகளை, கலெக்டர் முன்வைக்க, விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர்.
மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேசுகின்றனர்; பிரச்னைகளை விளக்கி மனு அளிக்கின்றனர்.
கடந்த ஆக., மாதம், மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்துவதையே, வேளாண் அதிகாரிகள் மறந்து விட்டனர். இது, விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், ஆக., மாத குறைகேட்பு கூட்டத்தை, செப்., முதல் வாரத்திலேயே நடத்திமுடிக்கவேண்டும் என, விவசாய சங்கங்கள் கலெக்டரிடம் மனு அளித்தன. இதனால், 10ம் தேதி, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கத்தினர் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம், தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசலாம் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 10ம் தேதி நடைபெறும் கூட்டத்தை, ஆக., மாதம் ரத்து செய்யப்பட்ட கூட்டத்துக்கு பதிலாக கணக்கிடவேண்டும்; இம்மாதத்துக்கான கூட்டத்தை, வழக்கம்போல் மாத இறுதியில் நடத்த வேண்டும் என்பது விவசாயிகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. நாய்கடிக்கு ஆடுகள் பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு, பி.ஏ.பி.,ல் கடைமடைக்கு தண்ணீர், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, வனத்துறை நிவாரணம் இழுத்தடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பேச உள்ளனர்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி கடந்த மாதத்துக்கான குறைகேட்பு கூட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.