/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைதீர் கூட்டம் ரத்து: விவசாயிகள் அதிருப்தி
/
குறைதீர் கூட்டம் ரத்து: விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஆக 30, 2025 12:47 AM

திருப்பூர்; எவ்வித காரணமும் இன்றி, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை, மாவட்ட நிர்வாகம் உதறி தள்ளிவிட்டது. தீர்க்கப்படாத பிரச்னைகள் குவிந்துள்ள நிலையில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாதது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். விவசாயிகளின் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அரசு அலுவலர்கள், குறைகேட்பு கூட்டத்திலேயே பதிலளிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு குறைகேட்பு கூட்டத்திலும், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, வெவ்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு அளிக்கின்றனர்.
தேர்தல் காலம் தவிர, வேறு எந்த சூழலிலும், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்படுவதில்லை. ஆனால், இதுவரை இல்லாத வகையில், நேற்று நடைபெறவேண்டிய இந்த மாத கூட்டத்தை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வாரம் நடத்த வாய்ப்பு
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமியிடம் கேட்டபோது, 'இம்மாத விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாததற்கு எந்த காரணமும் இல்லை. கலெக்டரின் டூர் புரோகிராமிலேயே, குறைகேட்பு கூட்டம் இடம் பெறவில்லை. அதனாலேயே நடத்தப்படவில்லை. கலெக்டர் நேரம் சொன்னால், அடுத்த வாரத்தில் ஒருநாள் நடத்தப்படும்,' என்றார்.

