/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியால் சரிந்த நிலத்தடி நீர் மட்டத்தில்... மழைக்கு பிறகும் மாற்றமில்லை! மழை நீர் சேகரிப்பில் தொடரும் அலட்சியம்
/
வறட்சியால் சரிந்த நிலத்தடி நீர் மட்டத்தில்... மழைக்கு பிறகும் மாற்றமில்லை! மழை நீர் சேகரிப்பில் தொடரும் அலட்சியம்
வறட்சியால் சரிந்த நிலத்தடி நீர் மட்டத்தில்... மழைக்கு பிறகும் மாற்றமில்லை! மழை நீர் சேகரிப்பில் தொடரும் அலட்சியம்
வறட்சியால் சரிந்த நிலத்தடி நீர் மட்டத்தில்... மழைக்கு பிறகும் மாற்றமில்லை! மழை நீர் சேகரிப்பில் தொடரும் அலட்சியம்
ADDED : ஜூன் 09, 2024 11:42 PM

உடுமலை:வறட்சிக்கு பிறகு பெய்த கோடை மழை மற்றும் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழையால், கிடைக்கும் மழை நீரை சேகரிக்கவும், கட்டமைப்புகளை சீரமைக்கவும், எந்த துறையினரும் அக்கறை காட்டாமல் உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் உயர்வது கேள்விக்குறியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், விவசாயம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு நிலத்தடி நீரை பெற, 1 லட்சத்துக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமான போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில், நிலவிய வறட்சியால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகியது; காய்கறி சாகுபடி கைவிடப்பட்டது.
நிலங்கள் தரிசாவதை தடுக்க, 800 முதல் 1,500 அடி வரை போர்வெல்கள் அமைத்தும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி மரங்களை காப்பாற்றினர். பல லட்ச ரூபாய் செலவிட்டும், நிலத்தடி நீர் மட்டம் சரிவால், போர்வெல் மற்றும் கிணறுகளில் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. வறட்சியை சமாளிக்கும் வகையில், உடுமலை பகுதியில், பரவலாக கோடை மழை பெய்தது; தென்மேற்கு பருவமழை சீசனும் துவங்கியுள்ளது.
இருப்பினும், மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த எந்த துறையினரும் அக்கறை காட்டாமல் உள்ளனர்.
சிறப்பு திட்டம்
கிராமங்களிலுள்ள, குளம் மற்றும் குட்டைகளை, பராமரித்து, மழை நீரை தேக்கி வைத்து வந்ததால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, கிணறு மற்றும் போர்வெல்களுக்கு சீரான நீர் வரத்து கிடைத்து வந்தது.
பல்வேறு காரணங்களால், உள்ளூர் நீராதாரங்கள் அனைத்தும், பராமரிப்பின்றி, மழை நீரை சேகரிக்க முடியாத நிலையில் உள்ளன. வடகிழக்கு, தென்மேற்கு மற்றும் கோடை மழை பெய்தாலும், மழை நீரை சேகரிக்காதது ஆண்டுதோறும் சிக்கலை அதிகரித்து வருகிறது. இதற்காக ஜெ., ஆட்சிக்காலத்தில், மழை நீர் சேகரிப்புக்கான சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அதன்படி, அரசு கட்டடங்கள், கோவில்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி பெற மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு, சிறப்பாக துவங்கிய திட்டம் பின்னர் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது. அரசு அலுவலகங்களில் கூட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் காணாமல் போய் விட்டன; பல இடங்களில், பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
நீராதாரங்கள், ஓடைகள் ஆகியவையும் துார்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில், மழை நீர் வீணாகிறது.
இனியாவது மாறுமா?
உடுமலை பகுதியில் பரவலாக பெய்த கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து வருகிறது. இந்த சீசனில் கிடைக்கும் மழை நீரை சேகரித்தால், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும்.
கிணறு மற்றும் போர்வெல்களில், நீர் மட்டம் உயர்ந்து விவசாயமும் பாதுகாக்கப்படும். எனவே, உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.
இதற்கான கண்காணிப்பை ஒன்றிய மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வதால், அரிதாக கிடைக்கும் மழை நீரை தேக்கி, நிலத்தடி நீரையும் உயர்த்தலாம்.
இதற்கு, தன்னார்வ அமைப்புகளின் உதவிகளையும் பெற்று, கிராமம்வாரியாக பணிகளை துவக்கலாம். இந்த சீசனிலும் இத்தகைய பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆண்டு முழுவதும் வறட்சியும், விளைநிலங்கள் தரிசாவதையும் தடுக்க முடியாது.

