/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்
/
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்
நிலத்தடி நீர் செறிவூட்ட வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : செப் 27, 2024 11:33 PM

திருப்பூர்: ''ஒவ்வொரு ஆண்டும், அமராவதியில் இருந்து விரயமாகும் உபரிநீரை, உப்பாறு கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க, திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி: திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 10 ஊராட்சி களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. மாவட்டத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது.
திருப்பூர் ஒன்றியத்தில், 75 ஆடுகள் இதுவரை பலியாகியுள்ளன. கால்நடைத்துறை அதிகாரிகள், தெருநாய்களை கட்டுப்படுத்த திட்டமிட வேண்டும்.
சமூக ஆர்வலர் சரவணன்: திருப்பூர் தெற்கு தாலுகா, எஸ்.ஆர்., நகர் அருகே உள்ள, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகரில், மெயின் ரோட்டில் இருந்த, 30 வயதுள்ள மரம் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பான தகவல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாலிங்கம் (தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்): திருப்பூர் தெற்கு உழவர் சந்தை தொடர்பான புகார்களுக்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
விவசாயிகள் பல தலைமுறையாக பயன்படுத்தி வரும் நிலத்தை, கோவில் நிலம் என்று கூறி, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் கூறுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் முழுமையாக விசாரித்து தீர்வு காண வேண்டும்.
காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்): உப்பாறு பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் கேட்கவில்லை. வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அணைக்கு உயிர் தண்ணீர் வேண்டுமென தான் கேட்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும், 10 நாட்களுக்கு உயிர் தண்ணீர்விட்டால் போதும், கால்நடைகளுக்காவது தண்ணீர் கிடைக்கும். அரசூரில் இருந்து, குழாய் பதித்தால், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போல், அணைக்கு தண்ணீர் கொடுக்கலாம்.
தண்டபாணி (கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர்): உப்பாறு அணைக்கு தண்ணீர் இருந்தால், நிலத்தடி நீர் மட்டம் செறிவூட்டப்படும். அமராவதி ஆற்றில், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் வீணாக செல்கிறது. பாசன திட்டம் போக, உபரியாக வீணாகும் தண்ணீரை, உப்பாறு கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். விரயமாகும் தண்ணீரை பாதுகாப்பாக சேமித்தால், விவசாயிகள் பயனடையலாம்.
மதுசூதனன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): நாற்பது ஆண்டு களாக இல்லாத வகையில், கோவையில் நடந்த வேளாண் திட்ட முகாம் குறித்து விவசாயிகளுக்கு தகவல் தெரியவில்லை. திருப்பூர் வேளாண் அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.
உடுமலை உழவர் சந்தையில், வியாபாரிகள் கடை நடத்துகின்றனர்; வெளியேற்ற வேண்டும். வேடபட்டி ஊராட்சியில் கிணறு வெட்ட, வேலை உறுதி திட்டத்தில், அரசு ஊழியர் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியது விதிமீறல். மாவட்ட நிர்வாகம் விசாரித்தும், உரிய நடவடிக்கை இல்லை.