/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குரூப்-4' தேர்வு: தமிழ் பாடக் கேள்விகள் கடினம்! 129 மையங்களில், 27 ஆயிரத்து, 48 பேர் எழுதினர்
/
'குரூப்-4' தேர்வு: தமிழ் பாடக் கேள்விகள் கடினம்! 129 மையங்களில், 27 ஆயிரத்து, 48 பேர் எழுதினர்
'குரூப்-4' தேர்வு: தமிழ் பாடக் கேள்விகள் கடினம்! 129 மையங்களில், 27 ஆயிரத்து, 48 பேர் எழுதினர்
'குரூப்-4' தேர்வு: தமிழ் பாடக் கேள்விகள் கடினம்! 129 மையங்களில், 27 ஆயிரத்து, 48 பேர் எழுதினர்
ADDED : ஜூலை 13, 2025 01:18 AM

திருப்பூர் : பாடத்திட்டம் மாறிய பின் நடத்திய தேர்வு என்பதால், தமிழ்பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததாக, குரூப் -4 தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் -4 போட்டித்தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், 129 மையங்களில் தேர்வுகள் நடந்தன.
மாவட்ட அளவில், 33 ஆயிரத்து, 131 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கி, 12:30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வர்களில், 6,083 பேர் நேற்று தேர்வுக்கு வரவில்லை; 27 ஆயிரத்து, 48 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தும், இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள் அதிக அளவு தேர்வு எழுதியுள்ளனர்.
கலெக்டர் மனிஷ் நாரணவரே, போட்டித்தேர்வு நடந்த, எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் அமைந்திருந்த தேர்வு மையங்களுக்கு சென்று, தேர்வு பணிகளை பார்வையிட்டார். தேர்வு எழுதியவர்களை சந்தித்த போது, பாடத்திட்டம் மாற்றிய பிறகு நடந்த முதல் தேர்வு என்பதால், தமிழ்பாடத்தின் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், பள்ளி பாடப்புத்தகங்களை தாண்டி கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
தேர்வெழுதிய சிலர் கருத்து
ஜெய் ஹரீஸ்: குரூப் -4 தேர்வை, மூன்றாவது முறையாக எழுதினேன். பொது அறிவு, கணிதம் பாடங்களில் இருந்து, பயிற்சி பெற்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றது; மிக எளிதாக இருந்தது. தமிழ்பாடத்தில், பாடத்திட்டம் மாறிவிட்டது. இலக்கியம், இலக்கணம் கலந்து வரும்; இம்முறை, 80 சதவீதம் இலக்கணம் இடம்பெற்றதால், பயிற்சி பெற்ற வருக்கும் கடினமாகத்தான் இருந்தது; நம்பிக்கையுடன் தேர்வு எழுதியிருக்கிறேன்.
ராஜ் சங்கர்: போட்டித்தேர்வுக்கான தமிழ் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட பிறகு, முதன்முறையாக நடந்த தேர்வு என்பதால், கடினமாகத்தான் இருந்தது. வழக்கமாக, பள்ளி பாடப்புத்தகங்களை அதிகம்படிப்போம்; பயிற்சி பெறுவோம். இந்த தேர்வில், தமிழ்பாட கேள்விகள், எங்கே இருந்து எடுக்கப்பட்டது என்று புரியவில்லை. பாடபுத்தகங்களையும் தாண்டி கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
வழக்கமாக, தமிழ்பாடத்தில் மட்டும், 90 மதிப்பெண் எடுப்பேன்; இம்முறை, 'கீ செக்' செய்த பிறகுதான் கூற முடியும். மற்ற பகுதிகள் வழக்கம் போல் எளிதாகத்தான் இருந்தன.
வினோதினி: குரூப் - 4 தேர்வை, மூன்றாவது முறையாக எழுதினேன்; இருப்பினும், எதிர்பாராத அளவுக்கு, கேள்விகள் சற்று கடினமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு கேள்வியை புரிந்து, பதில் கண்டறிய அதிக நேரம் தேவைப்பட்டது.
மகாலட்சுமி: புத்தகத்தில் இருப்பதை படித்தால் மட்டும் போதாது; 'அவுட் சோர்ஸ்' வாயிலாகவும் தகவல்களை திரட்ட வேண்டும். புத்தகத்தை மட்டுமே படித்து பயிற்சி பெற்றதால், குரூப் -4 தேர்வு கடினமாகத்தான் இருந்தது.
கேள்விகளை புரியவே நேரம் கடந்தது. அதாவது, குரூப் -1 மற்றும் குரூப்-2 போட்டித்தேர்வை போல், கேள்விகள் இடம்பெற்றிருந்தது; இந்த தேர்வு கடினமாகத்தான் இருந்தது.
சரண்யா: போட்டித்தேர்வுகளை பலமுறை எழுதியிருக்கிறேன். குரூப் -4 தேர்வை, மூன்றாவது முறையாக எழுதியுள்ளேன். திருப்பூர் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக, தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறோம். மாதிரி தேர்வு நடத்துவதால், தேர்வு எழுதுவது எளிதாக இருந்தது.
கேள்விகள் பெரும்பாலும் எளிதாக இருந்தன; தமிழ்பாடத்தில் இலக்கணம் அதிகம் இருந்ததால், கேள்வியை புரிந்து, பதிலை கண்டறிய கால அவகாசம் கூடுதலாக தேவைப்பட்டது. ஆனால், நேரம் பற்றாக்குறையாக இருந்தது.