/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி. மேல்முறையீடு அலுவலகம் துவக்கம்! வர்த்தகர் சிரமம் வெகுவாக குறையும்
/
ஜி.எஸ்.டி. மேல்முறையீடு அலுவலகம் துவக்கம்! வர்த்தகர் சிரமம் வெகுவாக குறையும்
ஜி.எஸ்.டி. மேல்முறையீடு அலுவலகம் துவக்கம்! வர்த்தகர் சிரமம் வெகுவாக குறையும்
ஜி.எஸ்.டி. மேல்முறையீடு அலுவலகம் துவக்கம்! வர்த்தகர் சிரமம் வெகுவாக குறையும்
ADDED : டிச 09, 2025 07:21 AM

திருப்பூர்: திருப்பூர் வணிக வரி கோட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, ஜி.எஸ்.டி. மேல் முறையீட்டு அலுவலகம், நேற்று முதல் முழு வீச்சில் செயல்பாட்டை துவக்கியுள்ளது. இதனால், மாவட்ட வர்த்தகர்கள், மேல் முறையீடுகளை சுலபமாக தாக்கல் செய்து, விரைவான தீர்வு காணமுடியும்.
திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி, மூன்று வணிக வரி மாவட்டங்களுடன், கடந்த 2024, ஜூலை மாதம் முதல் திருப்பூர் வணிக வரி கோட்டம் செயல்பட்டுவருகிறது.
மூன்று வணிக வரி மாவட்டத்துக்கான துணை கமிஷனர் அலுவலகங்கள், வணிக வரி இணை கமிஷனர் (நிர்வாகம்) மற்றும் நுண்ணறிவு பிரிவு, தணிக்கை பிரிவு அலுவலகங்களுடன், வணி வரி கோட்டம் இயங்கிவருகிறது. ஆனாலும், ஜி.எஸ்.டி. மேல்முறையீடு அலுவலகம் இல்லததால், திருப்பூர் மாவட்ட வர்த்தகர்களும், ஆடிட்டர்களும் சிரமப்பட்டனர்.
வீண் அலைச்சல்
வரி செலுத்தியதில் குறைபாடுகள், கணக்கு தாக்கல் தவறுகள், நுண்ணறிவு பிரிவினரின் தணிக்கை அடிப்படையில், வணிக வரி அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், அபராதங்கள் தொடர்பாக, முதல்கட்ட மேல் முறையீடு செய்வதற்கு வர்த்தகர்கள், ஈரோடு அலுவலகத்தையை நாட வேண்டிய நிலை தொடர்ந்தது. வர்த்தகர்கள், மேல் முறையீடு செய்வதிலும், தீர்வு காண்பதிலும் காலதாமதம்; வீண் அலைச்சலை சந்தித்துவந்தனர்.
அரசாணை வெளியீடு
வர்த்தகர்கள் மற்றும் ஆடிட்டர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, திருப்பூர் வணிக வரி கோட்டத்தில் ஜி.எஸ்.டி. மேல்முறையீடு அலுவலகம் அமைத்து, கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. துணை கமிஷனர் தலைமையில், துணை வரிக வரி அலுவலர்கள் 2 பேர்; உதவியாளர் மூன்று பேர்; இளநிலை உதவியாளர் ஒருவர்; 5 அலுவலர்கள் ஆகிய 12 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
திருப்பூர், அவிநாசி ரோடு, இந்திரா நகரில், வணிக வரி மாவட்டம் -2 செயல்படும் வளாக, இரண்டாவது தளத்தில், மேல் முறையீட்டு அலுவலகத்துக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் பணிபுரிந்துவந்த பாண்டியராஜன் மாறுதல் செய்யப்பட்டு, திருப்பூர் வணிக வரி கோட்ட மேல் முறையீட்டு அலுவலகத்துக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து, புதிய ஜி.எஸ்.டி., மேல் முறையீட்டு அலுவலகம், நேற்று முதல் முழு வீச்சில் செயல்பாட்டை துவக்கியுள்ளது.
தீர்வு எளிதாகும்
திருப்பூர் வர்த்தகர்களால் செய்யப்பட்ட மேல் முறையீடுகள், ஈரோடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, திருப்பூர் மேல் முறையீடு அலுவலகத்துக்கு ஆன்லைனில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. புதிய மேல் முறையீடுகளை இனி, திருப்பூர் அலுவலகத்திலேயே தாக்கல் செய்யலாம்.
திருப்பூர் வணிக வரி மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக வரி சரகங்களிலிருந்தும் பிறப்பிக்கப்படும் அனைத்து விதமான உத்தரவுகள் சார்ந்த முதல் நிலை மேல் முறையீடுகளும் கையாளப்படும். இதனால், திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், மேல் முறையீடுகளுக்காக, ஈரோடு செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படும். மிக சுலபமாக திருப்பூரிலேயே மேல் முறையீடு செய்து, விரைவான தீர்வு காணமுடியும்.

