/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி. செலுத்தாததால் நிதியிழப்பு! : ஊராட்சி நிர்வாகங்கள் 'அசட்டை'
/
ஜி.எஸ்.டி. செலுத்தாததால் நிதியிழப்பு! : ஊராட்சி நிர்வாகங்கள் 'அசட்டை'
ஜி.எஸ்.டி. செலுத்தாததால் நிதியிழப்பு! : ஊராட்சி நிர்வாகங்கள் 'அசட்டை'
ஜி.எஸ்.டி. செலுத்தாததால் நிதியிழப்பு! : ஊராட்சி நிர்வாகங்கள் 'அசட்டை'
ADDED : ஜன 23, 2026 05:38 AM
பல்லடம்: ஊராட்சி நிர்வாகங்கள் ஜி.எஸ்.டி. செலுத்தாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜன., மாதம் நிறைவடைந்தது. தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஊராட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த பணிகளின் போதும் ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி., தொகையைப் பெரும்பாலான ஊராட்சிகள் செலுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறைவான தொகை கோருபவர்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது.
ஒப்பந்த பணி மற்றும் மெட்டீரியல் உள்ளிட்டவற்றுக்காக ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்யப்பட்டு, இது குறித்த கணக்கு வழக்குகள் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக முறையாக பராமரிக்கப்படுகிறது. ஆனால், ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலத்தின் போது, சில ஊராட்சிகளில், ஜி.எஸ்.டி., கணக்கு வழக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் லட்சங்கள், கோடிகளில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக பிடித்தம் செய்யப்படும் ஜி.எஸ்.டி., முறையாக பராமரிக்கப்படாமல், ஊராட்சித் தலைவர்கள், செயலர்கள் மற்றும் தணிக்கை அலுவலர்களும் இதனை முறையாக கண்காணிக்காததாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளிலும் இதே நிலை நிலவி வருவதால், தனி அலுவலர்கள், இதனை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், சிறப்பு தணிக்கை குழு அமைத்து, ஊராட்சி வாரியாக தணிக்கை செய்தால் மட்டுமே, ஜி.எஸ்.டி., வருவாய் இழப்பு குறித்து தெரியவரும்.
அரசுக்கு வருவாய் இழப்பு என்பதுடன், மக்களின் அத்தியாவசிய பணிகளும் இதில் அடங்குகிறது. மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

