/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு
/
ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு
ADDED : செப் 04, 2025 11:29 PM

ம த்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 ஆகிய விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பெரும்பாலான பொருட்களின் விலை குறைய உள்ளது. இதை திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
வளர்ச்சி விகிதம் சிறக்கும்
குணசேகரன், வாகன விற்பனையாளர், திருப்பூர்: ஜி.எஸ்.டி., திருத்தங்கள் வரவேற்கக்கூடிய வகையில் உள்ளது. வாகனங்களுக்கான வரிகள் 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வாகனம் வாங்குவோர் பலன் பெறுவர். அதே போல், வாகனங்களுக்கு அனைத்து வகை உதிரிபாகங்களுக்கும் 28ல் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி., வரி விதிப்பு என்பது வாகன உரிமையாளர்களுக்கும், உதிரிபாக விற்பனையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஜவுளித்துறையில் 2500 ரூபாய் வரை 5 சதவீதம் தான் என்பதால் நுகர்வோருக்கு லாபம். அதன்படி 7 சதவீதத்துக்கும் மேல் தற்போது குறைந்துள்ளது. பெரும்பாலான பொருட்கள் மீது 10 சதவீதம் குறைப்பு என்பது வரப்பிரசாதம். இதன் மூலம் மேலும் வர்த்தகம் பெருகும். வளர்ச்சி அதிகரிக்கும். வரும் 2027ல் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் உலகளவில் மூன்றாமிடம் அடைவோம்.
நடுத்தர குடும்பங்களுக்கு நன்மை
ஜனனி, சி.ஏ., இறுதியாண்டு மாணவி, திருப்பூர்: 'ஜி.எஸ்.டி., - 2.0'-ல், அனைத்து தரப்பினருக்கும் பயன் தரக்கூடிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
குழந்தைகளுக்கு பயன்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் உணவு வகைகள், பால் உற்பத்தி பொருட்கள் போன்றவற்றின் மீதும் 12ல் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் பாலிசிகள் மீதான 18 சதவீதம் வரி தற்போது 5 முதல் பூஜ்யம் என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மருத்துவ உபகரணங்கள் மீதான வரிகளும் 18 மற்றும் 12 சதவீதம் இருந்தது 5 சதவீதமாக குறைந்துள்ளது.மாணவர்கள் பயனடையும் வகையில், கல்வி உபகரணங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் மீதான வரிகள் 12 மற்றும் 5 சதவீதம் என இருந்தது தற்போது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
வேளாண் விவசாயிகள் பயனடையும் வகையில், நீர்ப்பாசன உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி., 12ல் இருந்து 5 சதவீதமாகவும், டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்களும் 5 சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் பயன்பெறுவர். மேலும், வாகனங்கள், உதிரிபாகங்களுக்கும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து நடுத்தர குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு.
இதுவரை 5, 12,18, 28 என இருந்த ஜி.எஸ்.டி., வரி விதிப்பு வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்போதைய நடவடிக்கையால், 5 மற்றும் 18 சதவீதம் என இரு வகையாக மட்டுமே விதிக்கப்படுவதால், இது போன்ற சிக்கல் மற்றும் சிரமங்கள் முற்றிலும் மறைந்து விடும்.
இல்லத்தரசியர் மகிழ்ச்சி
தனலட்சுமி, அர்த்தநாரி வீதி, திருப்பூர்: ஜி.எஸ்.டி., குறைப்பு சிறந்த முடிவு. எங்களை போன்ற இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான விஷயம். தினசரி பயன்படுத்த கூடிய ஹேர் ஆயில், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள், பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் என பலவற்றுக்கு ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு சிறந்த சேமிப்பாக இருக்கும். ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு செய்த மத்திய நிதியமைச்சர் மற்றும் பிரதமருக்கு இல்லத்தரசிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரே விகிதமாக இருக்கட்டுமே!
சுரேஷ், உரிமையாளர், மின்னணுப்பொருட்கள் நிறுவனம், திருப்பூர்: வீட்டில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப்பொருட்கள், பெண்கள் பயன்படுத்த கூடிய பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு வரி குறைத்துள்ளனர். அனைத்துக்கும் ஒரே வரிவிகிதம் கொண்டு வந்தால் சிறப்பு.
இன்றைய சூழலில், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு மக்கள் அதிகமாக செலவு செய்கின்றனர். எனவே, இதை கருத்தில் கொண்டு வரும் காலத்தில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். சிகரெட் போன்ற புகையிலை சார்ந்த பொருட்களுக்கு வரியை உயர்த்திருப்பது நல்லது. இவ்விஷயத்தில் செலவு செய்ய யோசிப்பார்கள்.
பல தரப்பட்டோருக்கும் பயன்
கந்தசாமி, பல்பொருள் அங்காடி உரிமையாளர், திருப்பூர்: ஜி.எஸ்.டி., குறைப்பு வரவேற்கத்தக்கது. வியாபாரிகள் மட்டுமல்ல; மக்களும் பயனடைவர். நிறுவனங்கள் வரி குறைப்பின் காரணமாக பொருட்களின் விலையை குறைக்க வாய்ப்பு அதிகம். தற்போது 45 ரூபாய் மதிப்பில் விற்பனையாகும் ஒரு சோப்பு, 40 ரூபாயாகக் குறையலாம்.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் விலை குறைக்கப்படும்போது, நடுத்தர மக்களுக்குப் பணம் மிச்சம் தான். எங்களைப் போன்ற வியாபாரிகள், காலாண்டுக்கு 20 ஆயிரம் வரி செலுத்துவது, 18 ஆயிரமாக குறையக்கூடும். வரி குறைப்பு வரவேற்கத்தக்கது, பலதரப்பட்ட மக்களும் நன்கு பயனடைவர்.
இன்சூரன்சுக்கு விலக்கு சிறப்பு
வினோத் ராமசாமி, அவிநாசி: ஜி.எஸ்.டி.,யில் இருந்து, எல்.ஐ.சி., மருத்துவ காப்பீடு உள்ளிட்ட இன்சூரன்ஸ்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு என பிரிமியம் தொகை செலுத்தும் போது 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியிருந்தது. மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு, எல்.ஐ.சி.,ல் முதலீடு செய்பவர்கள் கூட சற்று யோசித்தனர். மருத்துவம், ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
5 - 10 சதவீதமே போதும்
ஸ்ரீதேவி, - ராயன்கோவில் காலனி, அவிநாசி: பெரும் பொருளாதார நாடுகளை போல ஐந்து முதல் பத்து சதவீதம் வரி இருந்தாலே போதுமானது. 18 சதவீதம் என்பது மக்கள் மீது மறைமுகமாக சுமத்தப்படும் பாரம். அத்தியாவசியமாக விளங்கும் பால், அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கலாம்.
உயிர் காக்கும் மருந்துகள் மீது ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்கப்பட்டதாக வரும் தகவல் மகிழ்ச்சியை தருகிறது. எந்த ஒரு நொடியிலும் எதிர்பாராத தருணத்தில் மருத்துவ செலவு ஒரு குடும்பத்தை தலைகீழாகப் பொருளாதார ரீதியாக புரட்டி விடும். மருத்துவ துறை சார்ந்த பொருட்களுக்கும் விலக்கு அளிக்கலாம்.