/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியில் இரட்டிப்பு வளர்ச்சி உறுதி! உருவாகுமா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்?
/
ஏற்றுமதியில் இரட்டிப்பு வளர்ச்சி உறுதி! உருவாகுமா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்?
ஏற்றுமதியில் இரட்டிப்பு வளர்ச்சி உறுதி! உருவாகுமா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்?
ஏற்றுமதியில் இரட்டிப்பு வளர்ச்சி உறுதி! உருவாகுமா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்?
ADDED : பிப் 04, 2024 02:02 AM
''பிரிட்டனுடன் வரி யில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி, அடுத்த 10 ஆண்டுகளில், இரட்டிப்பு வளர்ச்சி பெறும்'' என, தொழில் வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடைத்தொழில் காலுான்றி வளர்ந்த பிறகு, 1990களில் இருந்து ஏற்றுமதி வர்த்தகமும், குழந்தை வளர்வது போல் வேகமாக வளர்ந்தது.
அவ்வப்போது, சாயக்கழிவுநீர் பிரச்னை, 'சி'பார்ம் பிரச்னை, தண்ணீர் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு என, பல்வேறு பிரச்னைகளை கடந்து, எதிர்நீச்சல் போட்டு வென்று வந்துள்ளது.
எந்தவொரு தொழிலாக இருந்தாலும் சரி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நான்கு மடங்கு வளர்ச்சி பெறுவது இயல்பு; திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, 10 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
போட்டித்திறன் மேம்பாடு
தொழில்முனைவோர், உலகத்துடன் போட்டி யின்றி வென்றால் மட்டுமே, ஏற்றுமதி வர்த்தகத்தில் நிலைத்திருக்க முடியும். தரமான ஆடைகளை உற்பத்தி செய்து, குறித்த நேரத்தில் அனுப்பியதால், திருப்பூர் ஏற்றுமதியில் இடம்பிடித்தது.
இந்தியாவுக்கு போட்டியாக உள்ள நாடுகளில், உற்பத்தி செலவு குறைவு; இதன்காரணமாக, நம்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி செலவை ஈடுகட்ட, அரசு உதவி அவசியம். நேரடி மானிய உதவி இருந்தாலும் கூட, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அவசியம்.
பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பிரிட்டனுடன் ஒப்பந்தம் உருவானால், திருப்பூரின் தற்போது ஏற்றுமதி, 30 சதவீதம் உயரும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) பல இடங்களில் பதிவு செய்துள்ளது.
வர்த்தக வாய்ப்பு உயரும்
திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக ஆலோசகர்கள் கூறுகையில், 'பிரிட்டனுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், திருப்பூர் அதிக பயன்பெறும். அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக, பிரிட்டனுக்கு அதிக ஏற்றுமதி நடக்கிறது.
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி துவங்கியுள்ள நிலையில், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவானால், புதிய வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்; ஆறு மாதங்களில், 30 சதவீத வளர்ச்சி கிடைக்கும். பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், மத்தியில் புதிய அரசு அமைந்ததும், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
ஒப்பந்தம் நிறைவேறினால், இதர செலவுகளை ஏற்றுமதியாளர்கள் எளிதில் சமாளிக்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளில், திருப்பூர் இரட்டிப்பு வளர்ச்சி பெறும்,' என்றனர்.
கலாம் கனவு நிறைவேறுமா?
திருப்பூர் நிறுவனங்கள், வெளிநாடுகளை சேர்ந்த, 'பிராண்டட்' நிறுவனங்களுக்காக உற்பத்தி செய்கின்றன. இந்நிலையை மாற்றி, திருப்பூரில் இருந்தே பிராண்ட் உருவாக வேண்டும் என்று 2013ல் வந்திருந்த, அப் போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவுரை கூறியிருந்தார். சில 'பிராண்ட்' நிறுவனங்கள் வந்திருந்தாலும் கூட, திருப்பூருக்கென பிரத்யேக 'பிராண்ட்' உருவாக வில்லை; இனியாவது உருவாக்கப்பட வேண்டும்.