/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டாஸ்மாக் பார்'களில் குட்கா விற்பனை
/
'டாஸ்மாக் பார்'களில் குட்கா விற்பனை
ADDED : ஜூன் 20, 2025 02:33 AM
பொங்கலுார் : பொங்கலுார் வட்டாரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஒவ்வொரு கடைக்கும் போலீசார் 'மாமூல்' வசூல் செய்து வந்தனர். சமீப காலமாக சிறிய கடைகளில் போதை வஸ்துகள் விற்பனை செய்வதற்கு போலீசார் கெடுபிடி காட்டத் துவங்கி விட்டனர்.
ஒவ்வொரு கடையிலும் 'மாமூல்' வசூல் செய்வதில் பெரிய சிரமம் ஏற்படுகிறது. இதனால், தங்கள் ரூட்டை போலீசார் மாற்றி உள்ளனர். அதன்படி, 'டாஸ்மாக்' மதுக்கடை பார்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
ஊரெங்கும் கிடைக்காத போதை பொருட்கள் பலவற்றை 'டாஸ்மாக்' பார்களில் கிடைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஐந்து ரூபாய் மதிப்புள்ள ஒரு குட்கா பாக்கெட் மளிகை கடைகளில், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது டாஸ்மாக் பார்களில், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் போதை வஸ்துகளை வாங்க பெருமளவில் பணம் செலவிடுகின்றனர். பணம் செலவாவதுடன் அவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. மாமூல் வந்தால் போதும் என போலீசார் கண்களை மூடிக்கொண்டு உள்ளனர். இப்பிரச்னைக்கு எஸ். பி., ஒரு முடிவு கட்டுவாரா என்பது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.