ADDED : ஜூன் 12, 2025 05:07 AM

பல்லடம் : பல்லடம் அருகே, சி.டி.சி., காலனி செல்லும் தார் சாலையின் ஒரு பகுதி மண் தடமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்று வருகின்றனர்.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, கொசவம்பாளையம் ரோட்டில் இருந்து சி.டி.சி., காலனி செல்லும் ரோட்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோடு, கொசவம்பாளையம் ரோட்டில் இருந்து கொச்சி செல்லும் நெடுஞ்சாலையை இணைப்பதாக உள்ளது.
அரசு போக்குவரத்து கழக பணிமனையும் இங்கு உள்ளதால், அதிகப்படியான வாகன ஓட்டிகள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் போடப்பட்ட இந்த ரோடு கடந்த சில தினங்களுக்கு முன், குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டது.
பணிகள் முடிந்து அரைகுறையாக மூடப்பட்டதால், தார் ரோடு பாதி; மண் தடம் மீதி என, ரோடு, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு கி.மீ., துாரம் ரோடு இதே நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்த ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.