ADDED : பிப் 04, 2024 02:02 AM
திருப்பூர்;கடந்த 2023 டிச., 5ம் தேதி, சமூக நலத்துறையின் கீழ், அரசு மருத்துவமனையில் செயல்படும், 'ஒன் ஸ்டாப் சென்டர்' அமைப்பு மூலம் 35 வயதுடைய ஒரு வட மாநில பெண் திருப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டார்.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அவர் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் தங்கி சிகிச்சை அளிக்கப்பட்டார். அவருக்கு மனச்சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை மருத்துவர் குழு அளித்தது. அவரிடம் விசாரித்த போது, ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், சீசாக்கான் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண் என தெரிந்தது.
இரு குழந்தைகளுக்கு தாயான அவர், கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று, தன் தாயுடன் வசிப்பது தெரிந்தது. 'சேவ்' அமைப்பின் உதவியுடன் தாய் திருப்பூர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டு திரும்ப ரயிலில் சொந்த ஊர் திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகேசன் முன்னிலையில், டாக்டர் சஞ்சய், சமூகப் பணியாளர் பத்மாவதி, செவிலியர் அமுதா ஆகியோர் அப்பெண்ணை 'டிஸ்சார்ஜ்' செய்து தாயாருடன் அனுப்பினர்.