ADDED : ஜன 08, 2024 01:24 AM

உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில், 6,603 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த 'உலக முதலீட்டாளர் மாநாடு -2024 நிகழ்ச்சிகள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுசெயலாளர் திருக்குமரன் முன்னிலை வகித்தனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் அதிக தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
குறு தொழில் நிறுவனங்கள் மூலம், 111.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 37 புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறு தொழில் நிறுவனங்கள் மூலம், 6,374. 34 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடு மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம், 117.40 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு, 6,603.24 கோடி ரூபாய் மதிப்பிலான, 439 புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.