ADDED : ஜூன் 10, 2026 06:50 AM

பல்லடம்: பல்லடம் அருகே, மறு நடவு செய்யப்பட்ட ஆலமரம், ஒரே மாதத்தில் துளிர்விட்டது, கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் முன் இருந்த நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று, கடந்த மாதம் வீசிய பலத்த சூறைக்காற்றுக்கு வேருடன் சாய்ந்து விழுந்தது.
பழமையான இம்மரத்தை எப்படியாகுவது பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கிராம மக்கள் மரத்தை மறு நடவு செய்ய தீர்மானித்தனர்.
அதன்படி, மே 10ம் தேதி, கிளைகள் வெட்டப்பட்டு, மரம் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு, கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளத்தின் கரையில் மறு நடவு செய்யப்பட்டது. இதன் அருகருகே, மரத்தின் கிளைகளும் நடவு செய்யப்பட்டன.
தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் இணைந்து மரத்துக்கு பூஜை செய்து வழிபட்டனர். கடந்த மாதம், 10ம் தேதி மறுநடவு செய்த நிலையில், இந்த மாதம், மரம் துளிர்விட்டுள்ளது.
மறு நடவு செய்யப்பட்ட ஒரே மாதத்தில் மரம் துளிர்விட்டது கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆலமரம், பசுமையுடன், பல்லுயிர் பெருகத்துக்கும் ஆதாரமாக இருக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
