/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹாட்டியா, கட்ரா ரயில்களால் பயன்
/
ஹாட்டியா, கட்ரா ரயில்களால் பயன்
ADDED : ஜன 19, 2026 05:43 AM
திருப்பூர்: மத்திய ரயில்வே அமைச்சகம் கன்னியாகுமரி - கட்ரா ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்: 16317), எர்ணாகுளம் - ஹாட்டியா தர்தி ஆபா சூப்பர் பாஸ்ட் (எண்:22837) உள்ளிட்ட மூன்று ரயில்கள் திருப்பூரில் நின்று செல்ல ஒப்புதல் அளித்துள்ளது.
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியின் முக்கிய புறநகர பகுதி 'ஹாட்டியா'. தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் போக்குவரத்து மையங்களில் முதன்மையானது. எஃகு, சுரங்கம், ரயில்வே, மின்சாரம், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளுக்கான மூலதன உபகரணங்களை இந்தியாவில் வழங்கும் முன்னணி பொறியியல் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, ஹெவி இன்ஜி. கார்ப்பரேஷன் (என்.இ.சி.) இங்குள்ளது.
தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம், முக்கிய கல்வி நிறுவனங்கள் இங்குள்ளன. சுபர்ணரேகா நதியின் மீது கட்டப்பட்ட ஹட்டியா அணை பிரபலமான சுற்றுலா, பொழுதுபோக்கு இடமாக உள்ளது.
வெள்ளி இரவு 11:25க்கு எர்ணாகுளத்தில் புறப்படும் ஹாட்டியா ரயில் (எண்:22838) அதிகாலை, 4:17 மணிக்கு திருப்பூர் வரும். ஞாயிறு மாலை 3:35க்கு ஹட்டியா செல்லும். மறுமார்க்கமாக வியாழன் மாலை 5:25 க்கு ஹாட்டியாவில் புறப்படும் ரயில் (எண்:22837) சனி அதிகாலை, 3:27 மணிக்கு திருப்பூர் வருகிறது; காலை, 9:45 க்கு எர்ணாகுளம் சென்று சேருகிறது.
கன்னியாகுமரி -கட்ரா ரயில் ஜம்மு காஷ்மீர், உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதி, கட்ரா. புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது. இமயமலைக்கு அருகில் உள்ளது. 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, காளி ஆகியோரின் உறைவிடமாகும்.
வடக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள குறிப்பிடத்தக்க பகுதி. நாடு முழுதும் உள்ள பக்தர்கள் மலையேறி கோவிலை அடைகிறார்கள். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமான இக்கோவில், ஜம்மு - பாராமுல்லா ரயில்பாதையில் இருந்து, மலை வாசஸ்தலத்தில் உள்ளது.
வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2:15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - கட்ரா ரயில் (எண்:16317), சனிக்கிழமை அதிகாலை, 2:09 மணிக்கு திருப்பூர் வரும். திங்கள் காலை, 10:45 மணிக்கு கட்ரா சென்றடையும்.
மறுமார்க்கமாக கட்ராவில் இருந்து கன்னியாகுமரிக்கு புதன் இரவு10:30க்கு புறப்படும் ரயில், சனிக்கிழமை காலை, 10:03 மணிக்கு திருப்பூரை கடக்கிறது; இரவு 10:00 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது.

