/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாறு நாள் திட்டத்தில் நலம் காணுது நர்சரி
/
நுாறு நாள் திட்டத்தில் நலம் காணுது நர்சரி
ADDED : நவ 10, 2024 04:08 AM

வருங்கால தலைமுறைக்கு சுத்தமான காற்று, நீர் உள்ளிட்ட மாசுபடாத சுற்றுச்சூழலை விட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக, கிராமப்புறங்களில், பசுமை போர்வையை அதிகப்படுத்தும் நோக்கில், பனைவிதை நடும் திட்டம் மற்றும் நாற்று நர்சரி உருவாக்கும் திட்டத்தை ஊக்குவித்து வருகிறது அரசு.
அவ்வகையில், தொழில் நகரமான திருப்பூருக்கு அருகே அவிநாசி ஒன்றிய அளவில் நடுவச்சேரி ஊராட்சியில், பனை விதை நடவு செய்யும் திட்டமும், நாற்று நர்சரியும் பலன் கொடுக்க துவங்கியிருக்கிறது; அந்த பலனை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள் அறுவடை செய்ய துவங்கியிருக்கின்றன.
அரசின் பனை விதை நடும் திட்டத்தில், கடந்தாண்டு, இங்குள்ள, வேலங்காடு குட்டையில், 750; மாரப்பம்பாளையம் குட்டையில், 180, தளிஞ்சிப்பாளையம் குட்டையில், 150 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. அவற்றில், 90 சதவீத பனை விதைகள் துளிர்விட்டு, வளர துவங்கியிருக்கிறது.
'இந்த ஊராட்சியில் உள்ள நர்சரியில், கடந்தாண்டு, 60 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கியுள்ளோம்' என்கின்றனர் ஊராட்சி நிர்வாகத்தினர். மேலும் அவர்கள் கூறுகையில், 'புங்கை, புன்னை, ஆனை குன்றிமணி, சேத்தான் குட்டை, வில்வம், ஆலமரம், புளியமரம், சிவகுண்டலம், மந்தாரை, உதியன், பூவரசன், வன்னி, மகிழம்பூ, தான்றிக்காய், விதை உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டன. இந்தாண்டும், 15 லட்சம் ரூபாய் செலவில், 50 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்ய, ஊரக வளர்ச்சி முகமையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இம்முறை, விரைவில் வளர்ந்து பலன்தரக்கூடிய மலர்க்கொன்றை உள்ளிட்ட பல வகை மரம், செடிகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன' என்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'பொதுவாக, கிராம ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை திட்டம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பி வரும் நிலையில், நடுவச்சேரி ஊராட்சியில், நாற்று நர்சரி சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஆக்கப்பூர்வ பணிகளில் நுாறுநாள் திட்ட தொழிலாளர்களை பயன்படுத்துவது சிறந்த பயனளிக்கிறது,' என்றனர்.
இந்தாண்டும், 15 லட்சம் ரூபாய் செலவில், 50 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்ய, ஊரக வளர்ச்சி முகமையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இம்முறை, விரைவில் வளர்ந்து பலன்தரக்கூடிய மலர்க்கொன்றை உள்ளிட்ட பல வகை மரம், செடிகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன