/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார மேம்பாடு; ஆண்டுக்கு ஒரு திட்டம்; கிராமங்களில் இல்லை மாற்றம்
/
சுகாதார மேம்பாடு; ஆண்டுக்கு ஒரு திட்டம்; கிராமங்களில் இல்லை மாற்றம்
சுகாதார மேம்பாடு; ஆண்டுக்கு ஒரு திட்டம்; கிராமங்களில் இல்லை மாற்றம்
சுகாதார மேம்பாடு; ஆண்டுக்கு ஒரு திட்டம்; கிராமங்களில் இல்லை மாற்றம்
ADDED : டிச 20, 2024 07:22 PM
உடுமலை; கிராமங்களின் சுகாதார மேம்பாடு, விழிப்புணர்வுக்கு ஆண்டுக்கு ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டாலும், தொடர் கண்காணிப்பு இல்லாததால், எவ்வித பலனும் இல்லாமல், சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது.
மத்திய, மாநில அரசு திட்டங்களின் வாயிலாக, கிராமப்புற மக்களுக்கு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமல், அனைத்து திட்ட செயல்பாடுகளிலும் தொய்வு நிலவுகிறது.
குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக முடங்கி, அனைத்து கிராமங்களிலும் சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், கிராமங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு குறித்து, 'நம்ம ஊரு சூப்பரு 'என்ற பெயரில், விளம்பர பேனர்கள் வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கிராமசபை கூட்டங்களில், விளம்பர பேனர்கள் வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆண்டுக்கு ஒரு விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்துகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும், மக்கள் கூடும் பகுதிகளிலும், இந்த பேனர்கள் வைக்கப்பட்டன. ஆனால், திட்ட செயல்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், கிராமங்களில், வீடுகள் தோறும், மக்கும் குப்பை; மக்காத குப்பை என, தரம்பிரித்து வாங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், அதற்கேற்ப உபகரணங்கள், இயந்திரங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், குப்பையை மொத்தமாக சேகரித்து தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது.
இது குறித்து ஒன்றிய அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை; மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. கிராம சுகாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள்; விழிப்புணர்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும், பலனில்லாத நிலை தொடர்கிறது.
திடக்கழிவு மேலாண்மையை முழுமையாக பின்பற்றுவதற்கான விதிமுறைகளை, அரசு வகுத்து ஊராட்சிகள் வாயிலாக செயல்படுத்தினால் மட்டுமே, சுகாதார சீர்கேடுகளில் இருந்து கிராமங்கள் தப்ப முடியும்.