/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெய்யெனப் பெய்யும் மழை!திசை எட்டும் பசுமை பரப்பிய 'வனத்துக்குள் திருப்பூர்'
/
பெய்யெனப் பெய்யும் மழை!திசை எட்டும் பசுமை பரப்பிய 'வனத்துக்குள் திருப்பூர்'
பெய்யெனப் பெய்யும் மழை!திசை எட்டும் பசுமை பரப்பிய 'வனத்துக்குள் திருப்பூர்'
பெய்யெனப் பெய்யும் மழை!திசை எட்டும் பசுமை பரப்பிய 'வனத்துக்குள் திருப்பூர்'
ADDED : ஜன 16, 2024 02:36 AM
ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழும் பெண் எப்படி, மழை பெய்யும் என்றால் மழை பொழியுமோ, அதனைப்போல, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், தாங்கள் வகுத்த மரக்கன்று வைத்து, பராமரித்து மரம் வளர்ப்பது என்பதை ஒன்பது ஆண்டாக ஒரு தவம் போல மேற்கொண்டு வருகின்றனர்.
'பிறப்பு என்பது சம்பவமாக இருக்கலாம்... இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், அதேபோல் வாழ்ந்து காட்டினார். அவர் விரும்பியபடி, அதிக மரங்களை வளர்க்க வேண்டும் என்ற பசுமை இலக்குடன், அவரது நினைவு நாள் அஞ்சலி கூட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம் உருவானது.
ஒரு லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 2015ல் நடப்பட்டது. சரியான உழைப்பு என்ற நீரோட்டத்தால், வேர் விட்டு வளர்ந்த அத்திட்டம், ஒன்பது ஆண்டுகளில் பல லட்சம் விருட்ஷங்களை உருவாக்கியது; பசுமை பரப்பையும் உயர்த்தியது.
'மரம் விவசாயிக்கு சொந்தம்... துாய்மையான காற்று அனைவருக்கும் சொந்தம்' என்று, ஆரம்பத்தில் மரக்கன்று நடப்பட்டது. அவை, குறுங்காடுகளாகவும், அடர்வனமாகவும் உயர்ந்து நின்ற போது, பல நுாறு உயிரினங்களுக்கான வாழ்வாதார மண்டலமாக பரிணாமித்தது.
'வனத்துக்குள் திருப்பூர்-9' திட்ட இலக்கு பூர்த்தியாகும் நேரம் நெருங்கிவிட்டது. ஆம், மாவட்டத்தில் நட்டு வளர்க்கும் மரக்கன்றுகள் எண்ணிக்கை, விரைவில் 18 லட்சம் என்ற மாபெரும் சாதனையை படைக்கப்போகிறது.
சாதாரண மரம் வளர்ப்பின் வாயிலாக, சாதிக்க முடியாத அளவுக்கு, விவசாயிகள் வருவாய் ஈட்டவும் திட்டக்குழுவினர் உதவி வருகின்றனர். வானம் பார்த்த தரிசாக கிடந்த நிலங்கள், இன்று பூமித்தாய் அளித்த பரிசு என்று போற்றும் அளவுக்கு, பசுமை கூடாரமாக மாறியுள்ளது.
சங்க இலக்கிய பூங்கா
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், பிற அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களு டன் இணைந்து, மாபெறும் சாதனையை படைத்துள்ளது. இடுவாய் ஊராட்சியில் உள்ள மாநகராட்சி நிலத்தில், அரியவகை மூங்கில்கள், பட்டாம் பூச்சி பூங்கா, பயிலரங்கம் என, மாபெரும் அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கிய நுால்களில் குறிப்பிட்டிருந்த அரியவகை நாட்டு மரங்களை நட்டு, சந்திராபுரத்தில், சங்க இலக்கிய பூங்கா அமைக்கும் முயற்சியும் துவங்கிவிட்டது.
வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் கூறுகை யில், ''ஆகச்சிறந்த பசுமை ஆர்வலர் படையை கொண்ட 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், மாவட்டத்தின் எட்டு திசைகளிலும், இன்று பசுமை சூழலை உருவாக்கியிருக்கிறது; மாவட்டத்தில் பசுமை பரப்பையும் விஸ்தரிப்பு செய்துள்ளது என்றே கூறலாம்'' என்றார்.