/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை 'ஹைடெக்' இயந்திரங்கள் ஓரிடத்தில்... சங்கமம் !'நிட்டெக்' கண்காட்சி இன்று கோலாகல துவக்கம்
/
பின்னலாடை 'ஹைடெக்' இயந்திரங்கள் ஓரிடத்தில்... சங்கமம் !'நிட்டெக்' கண்காட்சி இன்று கோலாகல துவக்கம்
பின்னலாடை 'ஹைடெக்' இயந்திரங்கள் ஓரிடத்தில்... சங்கமம் !'நிட்டெக்' கண்காட்சி இன்று கோலாகல துவக்கம்
பின்னலாடை 'ஹைடெக்' இயந்திரங்கள் ஓரிடத்தில்... சங்கமம் !'நிட்டெக்' கண்காட்சி இன்று கோலாகல துவக்கம்
ADDED : மார் 06, 2026 04:48 AM

திருப்பூர்: உலகளாவிய அதிநவீன பின்னலாடை இயந்திரங்களுடன், 18 வது நிட்டெக் கண்காட்சி, திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டிலுள்ள ஹைடெக் வளாகத்தில் இன்று துவங்குகிறது.
இந்திய பின்னலாடை உற்பத்தி துறையினரின் நவீனமயமாக்கலுக்கு கைகொடுக்கும்வகையில், 'ஹைடெக் இன்டர் நேஷனல் டிரேட் பேர்' நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, திருப்பூரில் 'நிட்டெக்' கண்காட்சியை நடத்தி வருகிறது. அவ்வகையில், 18வது நிட்டெக் கண்காட்சி, திருமுருகன் பூண்டி - பூலுவப்டட்டி ரிங் ரோட்டிலுள்ள ஹைடெக் வளாகத்தில் இன்று துவங்குகிறது.
இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில், ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல், கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், கண்காட்சி கையேட்டை வெளியிடுகிறார். 'சைமா' தலைவர் சண்முக சுந்தரம் உள்பட பின்னலாடை துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 2 லட்சம் சதுர அடியில், மூன்று பிரமாண்டமான அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள 360 ஸ்டால்களில், உள்நாடு, வெளிநாட்டு தயாரிப்பிலான, புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் முழு இயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஹைடெக் இன்டர் நேஷனல் டிரேட் பேர் நிறுவன தலைவர் ராயப்பன் கூறியதாவது:
நிட்டெக் கண்காட்சி, 6ம் தேதி முதல் (இன்று முதல்) 9ம் தேதி வரை, தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக, பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ஒரு அரங்கு, 120 அடி அகலம்; 500 அடி நீளத்தில் அமைக்கப்படும். ஆசியாவிலேயே முதல்முறையாக, இந்த கண்காட்சியில், அரங்கின் அகலம் 170 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நிட்டிங், டையிங், காம்பாக்டிங் என பெரிய அளவிலான இயந்திரங்களும்கூட, தாரளமான இடவசதியுடன், முழு இயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் விலையில்உள்நாட்டு இயந்திரம் வெளிநாட்டு இயந்திரங்கள் மட்டுமின்றி அதே தரம் மற்றும் தொழில் நுட்பத்தில், பட்ஜெட் விலையிலான உள்நாட்டு இயந்திரங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன.
ஜெர்மனிக்கு இணையான உள்நாட்டு டிஜிட்டல் பிரின்டிங் மெஷின், தர ஆய்வு கட்டமைப்புடன் கூடிய டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்கள் வந்துள்ளது. பிரின்டிங் முடிந்த உடனேயே தர பரிசோதனையும் முடிந்துவிடுவதால், நேரடியாக பேக்கிங் செய்து விடலாம். ஒரு கிலோ துணியை 4 லிட்டர் தண்ணீரில் சாயமேற்றும் இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. துருக்கி நிறுவனம், ஒரு கிலோ துணியை 2 லிட்டர் தண்ணீரில் சாயமேற்றும் அதிநவீன மெஷினை கொண்டுவந்துள்ளது. இது, பின்னலாடை துறையில் பிராசசிங் செலவினங்களை குறைக்க துணைபுரியும்.
மதிப்பு கூட்டு ஆடைமுத்திரை பதிக்கும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பிலும் முத்திரை பதிக்க ஏதுவாக, சீன தொழில்நுட்பத்திலான பாலியெஸ்டர் நிட்டிங் மெஷின்கள், கண்காட்சியின் பிரத்யேக அரங்குகளில், அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டிருக்கின்றன. இதேபோல், நிட்டிங் முதல் பேக்கிங் வரை, பின்னலாடை துறையின் அனைத்து பிரிவுகளுக்குமான உலகளாவிய அதிநவீனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சங்கமித்துள்ளன.
திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, கரூர், சென்னை போன்ற தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், டில்லி, லுாதியானா, மும்பை, கோல்கத்தா என நாடுமுழுவதும் உள்ள பின்னலாடை துறையினர், கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக விசாரணைகள் நடத்த உள்ளனர். நான்கு நாட்களில், மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை கண்காட்சியை பார்வையிடுவர் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஜெர்மனிக்கு இணையான உள்நாட்டு டிஜிட்டல் பிரின்டிங் மெஷின், தர ஆய்வு கட்டமைப்புடன் கூடிய டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்கள் வந்துள்ளது. பிரின்டிங் முடிந்த உடனேயே தர பரிசோதனையும் முடிந்துவிடுவதால், நேரடியாக பேக்கிங் செய்து விடலாம்

