sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாரியம்மன் கோவில் சிறப்புக்கள்

/

மாரியம்மன் கோவில் சிறப்புக்கள்

மாரியம்மன் கோவில் சிறப்புக்கள்

மாரியம்மன் கோவில் சிறப்புக்கள்


ADDED : ஆக 08, 2024 11:24 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி தாலுகா, கருவலுாரில் மாரியம்மன் கோவில், கொங்கு வடபரிசார நாட்டில், ஆறை வள நாட்டில், நள்ளாற்றன் கரையில் அமைந்துள்ளது. நள்ளாறு என்றால் குளிர்ந்த நீரைக் கொண்ட ஆறு என்று பொருள்.

நள்ளாற்றின் தென் கரையில், திருகு கள்ளிக்காடு மிகவும் செறிந்து அடர்த்தியாக இருந்தது. இந்த கள்ளிக் காட்டுக்குள், இவ்வூரார் வளர்த்து வந்த ஆநிரைகள் மேய்ந்து வந்தன. இந்த திருகுக் கள்ளிக்காட்டில், ஒரு சுயம்புக் கல்லில், பசுக்கள் தாமாகவே பாலைச் சுரந்து வழிபட்டன. மாலையில் பால் கறக்கும்போது, பால் பசுக்களின் மடியில் குறைந்ததைக் கண்டு, இவ்வூரார், பசுக்களை திருகு கள்ளிக்காட்டுக்குள் தொடர்ந்து சென்று பார்த்தனர்.

அந்தக் காட்டில், காரை மரத்தின் அடியில் விளங்கிய சுயம்பின் மீது, பசுக்கள் தாமாகவே பால் சொறிவதைக் கண்டு அதிசயித்த இவ்வூர் மக்கள் இதை அம்பிகை பீடமாக வழிபட்டனர். கோமாரி நோய் தாங்கிய பசுக்கள் தாமாகவே, பால் சொரிந்து, அவை குணமாகியதைக் கண்டு அதிசயித்தனர். பின், இவ்வூரில் விளங்கிய கொங்கு வேளாளர் கனவில், அம்பிகை தோன்றி, தான் மாரியம்மையாக எழுந்தருளி உள்ளதாக தெரிவித்தாள். அதன்பின், கோவில் அமைத்து, அம்பிகை திருவுருவம் அமைத்து வழிபட்டனர்.

''வலது கை உடுக்கை, இடது கை சூலம் வருமொரு வலதுகை கத்தி குலவிய இடது கையினிற் கபாலம் கொண்டு அழல் சிகைமுடி தாங்கி நிலவிய நீலப்பட்டுடை அணிந்து நின்றிடும் கோலமே பெற்ற அலகிலாக் கருணைக் கருவலூர் மாரி அம்பிகை பதமலர் துணையே''

இருப்பிடம்:


கருவலூர் என்பது, அவிநாசிக்கு மேல்புறம்- அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலையில் 10 கி.மீ தொலைவிலும், அன்னூருக்குக் கீழ்புறம் 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் அவிநாசிக்கும், அன்னூருக்கும் நடுவில் அமைந்து உள்ளது.

கருவலூர் மாரி:


கல்வெட்டுக்கள் இவ்வூரை 'பழங்கருவலுார்' என்று குறிப்பிடுகின்றன. இந்த ஊரில், கொங்குச் சோழர் காலத்தில் கட்டப்பெற்ற அருள்மிகு கங்காதர ஈஸ்வரர் கோவிலும், அருள்மிகு கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலும், மைசூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்ற அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோவிலும் உள்ளது. இவை தவிர ஆஞ்சநேயர் கோயில், அங்களாம்மன் கோவில் என பல கோவில்கள் நிறைந்துள்ளது.

ஊர் பெயர் காரணம்


சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் அவிநாசித்தலத்தில் எழுந்தருளி முதலையுண்ட பாலகனை குளக்கரையில் நின்று முதலைவாய்ப் பிள்ளையை வரவழைக்க திருப்பதிகம் அருளிய நாளில் வறண்ட அக்குளத்தில் நீர் நிரம்பும் பொருட்டு இவ்வூரில் ஒருமேகம் தோன்றி விண்ணில் அதிர்ந்து மின்னிப்பெருமழை பொழிந்தது.

அந்த வெள்ளம் நள்ளாற்றில் பெருகி சென்று அவிநாசி தாமரைக்குளத்தை நிரப்பியது. அந்நீர் பெருக்கில் தோன்றிய முதலை அந்தணச் சிறுவனை ஆரூர்ப் பெருமானிடம் தந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெற மேகம் இவ்வூர்வரைப்பில் கருவிருந்து மழைபொழிந்த காரணத்தால் கருவலுார் என்றழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு:


அழகிய, சிறிய ஐந்து நிலை இராஜகோபுரம் 1991-ல் கட்டப்பெற்றது. இதன் கதவுகள் நல்ல சிற்பத்திறம் கொண்டவை. உள்ளே சென்றதும் கொடிமரம் கருங்கற்களால் ஆன,. 30 கால் கல் மண்டபம். இதன் ஒரு மூலையில் விநாயகப் பெருமான் நம்மை வரவேற்கிறார். அவரை வணங்கி உள்ளே நுழையும் போது, வலதுபுறம் உற்சவத் திருமேனிகள். 'இப்போது தான் வந்தாயா?' என்று விசாரிக்கும் தோரணையில் அருட்பார்வை செய்கிறாள் அன்னை மாரி.

அம்பிகையின் சிறப்பு:


இந்த மாரியம்மனின் சிறப்பு, கண் நோய் தீர்ப்பது தான். மருத்துவர்களால் கைவிடப்பட்ட கண்நோய்கள் கூட இங்கு குணமாகியுள்ளன. பல பேருக்குக் கண் பார்வை மீளவும் கிடைத்து உள்ளது. அவ்வாறு அருள்பெற்ற பலரும், இனி அருள் பெற விழைவோரும் இக்கோவிலை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.

திருவிழாக்கள் :


திங்கள், வெள்ளி மற்றும் ஞாயிறு அமாவாசை நாட்கள் ஆகியவை அம்மனுக்கு உகந்த விசேஷ நாட்கள். மேலும் தைத்திங்கள் முதல் நாள், தமிழ் புத்தாண்டு, ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு, ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஆண்டு விழா, நவராத்திரி விழா, கார்த்திகை மாதம் தீப வழிபாடு ஆகியவை சிறப்பு விழாக்களாக நடைபெற்று வருகிறது.

பங்குனி மாதம் தேர்த்திருவிழா பண்ணாரி கோவில் குண்டம் முடிந்த இரண்டாம் நாள் துவங்கி நடைபெறுகிறது. 15 நாட்கள் காப்பு கட்டி நடைபெறும் தேர் திருவிழாவானது முதல் நாள் சிம்ம வாகனத்திலும், இரண்டாம் நாள் பூத வாகனத்திலும், மூன்றாம் நாள் ரிஷப வாகனத்திலும் அம்மன் தேரில் எழுந்தருளி வலம் வருவாள்.

அம்மையின் அற்புதங்கள்:


ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சேவூரைச் சேர்ந்த ஒரு பெரியவருக்கு கண்ணில் 'புருடு' தோன்றி பார்வையிழந்து விட்டார். தொடர்ந்து, கருவலுார் மாரிக்கு, 48 நாள் கோவிலிலேயே தங்கி அபிேஷகம் செய்து வந்தார். 48-ம் நாள் காலையில், உணவு உண்பதற்காக இலையை விரித்து தண்ணீர் தெளித்தபோது, கண்ணில் வளர்ந்திருந்த 'புருடு'எனப்படும் கட்டி இலையில் விழுந்தது. கண்ணும் நன்றாகத் தெரிந்தது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்குப் பிறந்த குழந்தைகள் மூன்றும் ஊமையாகி விட்டன. பிறர் கூறியதைக் கேட்டு. இவ்வூர் வந்து கோவிலில் ஒரு மாதம் தங்கி அபிேஷகம் செய்ததன் பின், கடைசிக் குழந்தை 'அம்மா, அப்பா' என அழைத்து அமுத மொழி பேசியது.

மேட்டுப்பாளையத்தில் வசித்த இஸ்லாமியர் ஒருவருக்கு கடுமையான அம்மை நோய் தாக்கப்பட்டு இக்கோவிலில் தங்கி தீர்த்தம் விட்டு வர அம்மை நோய் விரைவில் குணமாகியது. அவர் இன்று வரை கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அம்மையின் அற்புதங்களை ஏராளம் என்று கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன் கூறுகிறார்.






      Dinamalar
      Follow us