/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணி நிர்வாகி வெட்டிக் கொலை திருப்பூரில் அதிகாலையில் பயங்கரம்
/
ஹிந்து முன்னணி நிர்வாகி வெட்டிக் கொலை திருப்பூரில் அதிகாலையில் பயங்கரம்
ஹிந்து முன்னணி நிர்வாகி வெட்டிக் கொலை திருப்பூரில் அதிகாலையில் பயங்கரம்
ஹிந்து முன்னணி நிர்வாகி வெட்டிக் கொலை திருப்பூரில் அதிகாலையில் பயங்கரம்
ADDED : ஜூன் 26, 2025 02:33 AM

திருப்பூர்,:திருப்பூரில் ஹிந்து முன்னணி நிர்வாகி, நேற்று அதிகாலை அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து, ஏழு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், குமரானந்தபுரம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; ஹிந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். அதே பகுதியில் நண்பர்களுடன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று அதிகாலை, 3:30 மணியளவில், துாங்கிக் கொண்டிருந்த இவரை, நண்பர் ஒருவர் மொபைல் போனில் அழைத்தார். உடனே, வீட்டிலிருந்து நடந்து வந்தபோது, அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலமுருகன், அதே இடத்தில் இறந்தார்.
போலீஸ் துணை கமிஷனர் பிரவீன் கவுதம், உதவி கமிஷனர் வசந்தராஜன் உள்ளிட்ட போலீசார் விரைந்து விசாரித்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் பார்வையிட்டனர். மோப்ப நாய், 'ஹண்டர்' சடலம் கிடந்த இடத்தில் இருந்து சில அடி துாரத்துக்கு சென்று திரும்பியது.
நண்பர்கள் சிலருடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை நடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க, ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
'சம்பவம் முடிஞ்சுது'
போலீசார் கூறியதாவது:
பாலமுருகனின் சொந்த ஊர் தேனி. ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இவர் மீது, 2023ல் அனுப்பர்பாளையத்தில் அடிதடி வழக்கு ஒன்று உள்ளது. ஹிந்து முன்னணியில் பொறுப்பு பெறுவது தொடர்பாக, சுமன் என்பவருடன் பிரச்னை இருந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் சுமன், நரசிம்ம பிரவீன் உள்ளிட்டோரை கட்டை, இரும்பு கம்பியால் தாக்கியது தொடர்பாக, பாலமுருகன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பெண் விவகாரத்திலும் பிரச்னை ஏற்பட்டுஉள்ளது.
நேற்று முன்தினம் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, நள்ளிரவில் நண்பர் ஒருவருடன் பாலமுருகன் தன் வீட்டுக்கு சென்றார். நரசிம்ம பிரவீன் என்பவர், பலமுறை, நேற்று முன்தினம் இரவு பாலமுருகனை மொபைல் போனில் தொடர்பு கொள்ள அழைத்தார். போனை அவர் எடுக்கவில்லை. பின், அதிகாலை, 3:30 மணியளவில் நண்பரை சந்திக்க வீட்டிலிருந்து வெளியேறி, 100 மீட்டர் துாரத்தில் கொல்லப்பட்டார்.
சந்தேகத்தின் அடிப்படையில், மூன்று பேரிடம் விசாரணை நடக்கிறது. அதில் ஒருவருக்கு, கொலையில் ஈடுபட்ட நபர்கள், 'சம்பவம் முடிஞ்சுது' என்று குறுந்தகவல் மற்றும் 'வாய்ஸ்' தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் மேலும் யார், யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு, போலீசார் கூறினர்.
ஹிந்து முன்னணி மறியல்
பாலமுருகனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், 'கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், உடலை வாங்க மாட்டோம்' எனக்கூறி, குடும்பத்தினர், ஹிந்து முன்னணியினர் தாராபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
தெற்கு துணை கமிஷனர் தீபா சத்யன் தலைமையில், கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் ஜான் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.