/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றியாளர்கள் வரலாறு; இளைஞர்களுக்கு ஊக்கம்
/
வெற்றியாளர்கள் வரலாறு; இளைஞர்களுக்கு ஊக்கம்
ADDED : ஜூன் 29, 2025 12:43 AM

தனது எழுத்துலக பயணத்தின் புதிய முயற்சியாக, கொங்கு மண்டலத்தில், அடிமட்ட நிலையில் இருந்து வானளாவ உயர்ந்துள்ள தொழில திபர்களின் வாழ்க்கை வரலாற்றை, கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினரும், எழுத்தாளருமான ஆதலையூர் சூரியகுமார் புத்தகமாக வடித்திருக்கிறார்.
'நம்பிக்கை நகரம்' என்ற தலைப்பிலான அவரது புத்தக வெளியீடு திருப்பூரில் நடந்தது. ஆதலையூர் சூரியகுமார் நம்மிடம் பகிர்ந்தவை:
புத்தகத்தில் கொங்கு மண்டல சாதனையாளர்களில், 11 பேரின் வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில், மாணவ, இளைய சமுதாயத்தினர் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு நம்பிக்கை, சிறந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
தங்கள் எதிர்காலத்தை எந்த வகையில் வடிவமைப்பது, சிக்கல்களை எப்படி சமாளிப்பது என, இந்தப் புத்தகம் வழிகாட்டும். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரின் அனுபவமும், ஒரு பாடமாக இருக்கும்.
இதுபோன்ற தன்னம்பிக்கை விதைக்கும் புத்தகங்களை மாணவர்கள், இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் போது, பொதுவாக அவர்களிடம் இருக்கும் சோம்பேறித்தனம் குறையும்; உழைப்பும், உற்பத்தியும் அதிகரிக்கும்.
பல்கலைகளில்பாடமாக்க முனைப்பு
இந்த புத்தகத்தை, இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து, ஒவ்வொரு மாநில பல்கலைகளில் பாடமாக வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். பாரதியார் பல்கலையில், தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பாடமாக வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நம் வெற்றியாளர்களின் வரலாற்றை, வெளிநாட்டினரும் படிக்க வகை செய்யும் வகையில், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட உள்ளது.
இந்தப் புத்தகம் வெற்றியாளர்களை புகழ்வதற்கு அல்ல; மாறாக, இளைஞர்களின் திறமையை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். உழைப்பால் உயர்ந்த இன்னும் சிலரின் தன்னம்பிக்கை வரலாறு, அடுத்த பாகத்தில் வெளிக்கொண்டு வர முயற்சி நடந்து கொண்டுள்ளது. விரைவில், 'பாகம் - 2' வெளியாகும்.