ADDED : ஜூலை 12, 2025 12:47 AM

திருப்பூர்,; திருப்பூரில் தீ விபத்தில் கொட்டகை வீடுகள் எரிந்து தரைமட்டமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுபோன்று பாதுகாப்பு இல்லாமல் அமைக்கப்பட்ட வீடுகள் குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.
திருப்பூர், கல்லம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரில் தாராதேவி, 50 என்பவருக்கு சொந்தமான இடத்தில் தகர ஷெட்டில் அமைக்கப்பட்ட கொட்டகை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது. இதில், திருவண்ணாமலை, செங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கி, கட்டடம், பனியன் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 9ம் தேதி மதியம் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து, நான்கைந்து காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. தீ விபத்தில் அங்கிருந்த வீடுகள் அனைத்தும் தரைமட்டமானது. அங்கு தங்கியிருந்த மக்களின் அனைத்து உடமைகளும் எரிந்து போனது. மின் கசிவா அல்லது காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதா என்று தீயணைப்பு துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.
தீ விபத்து நேர்ந்த இடத்தில் மாநகராட்சி, வருவாய்துறையினர், எம்.எல்.ஏ., என, அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பார்வையிட்டு சென்றனர். சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பற்ற சூழலில், பத்துக்கு பத்து அடி அளவில் வாடகைக்கு விட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது, 42 வீடுகள் என்று இருந்தது. அதன் பின் அதிகாரிகள் விசாரணையில், 26 குடும்பங்கள் தங்கியிருந்தது. ஆறு வீடுகள் காலியாக இருந்ததும், தீ விபத்தில், அருகே இருந்த வீடும் சேதமடைந்ததும் தெரிய வந்தது.
வீட்டின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, '16 வீடுகள் மட்டுமே வாடகைக்கு விட்டதாக,' கூறினார். தீ விபத்துக்கு பின், அந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கிய, காஸ் சிலிண்டர் வழங்கிய என, ஒவ்வொறு துறையும் தங்களை காப்பாற்றி கொள்ள மழுப்பலான பதில் சொல்லி தப்பிக்க பார்க்கின்றனர்.
நான்கைந்து ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் வாடகைக்கு இருந்து வருவதை மாநகராட்சியில் இருந்து போலீசார் வரை என, யாருக்கும் தெரியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசு துறை அதிகாரிகளின் அலட்சியமே, இந்த தீ விபத்துக்கு காரணமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, வீட்டின் உரிமையாளரிடம் இதுபோன்று விபத்து ஏற்படும் வகையிலும், தீயணைப்பு வாகனங்கள் போன்றவை எளிதாக வந்து செல்ல முடியாத இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் தகர கொட்டகையில் வீட்டை அமைப்பது தவறு என்பதை தெரிவித்து இருக்க வேண்டும். ஒருவேளை இரவு நேரத்தில் ஏற்பட்டு இருந்தால், அசம்பாவிதம் கடுமையாக இருந்திருக்கும்.
சாம்பலான சான்று
கல்லுாரி சான்றுகளை இழந்த ஆனந்தன், கண்ணீர் மல்க கூறியதாவது:
கல்லுாரி படிப்பை முடித்து விட்டு, அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளுக்காக படித்து தயாராகி வருகின்றேன். வீட்டிலிருந்த பள்ளி, கல்லுாரி என, அனைத்து சான்றுகளும் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. அடுத்து என்ன செய்வதுதென்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறேன்.