/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்
/
அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்
அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்
அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்
ADDED : அக் 01, 2025 12:02 AM

திருப்பூர்: புதிய தீர்வு கிடைக்கும் வரை, அமெரிக்காவின் அதிகபட்ச வரி உயர்வு செலவை, பரஸ்பரம் பகிர்வின் மூலமாக, வர்த்தகத்தை தடையின்றி தொடர விரும்புவதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 34 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. அடுத்தாக, 28 சதவீத பங்களிப்புடன் ஐரோப்பியாவும், தலா 9 சதவீத பங்களிப்புடன் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளன.
கடந்த நிதியாண்டில், 22 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கு, அமெரிக்காவுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு, 19 ஆயிரத்து, 199 கோடி ரூபாய்க்கும், பிரிட்டனுக்கு, 5,583 கோடி ரூபாய்க்கும் பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
நான்கு சீசன் ஆர்டர்
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம், தலா 90 நாட்கள் வீதம், நான்கு சீசன்களாக நடக்கின்றன. நுால் கொள்முதல் செய்து, துணி உற்பத்தி செய்வது, சாயமிட்டு பக்குவப்படுத்துவது, ஆடை வடிவமைப்பு, பிரின்டிங், எம்பிராய்டரிங் என, உற்பத்தி பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அமெரிக்கா, முதல்கட்டமாக 25 சதவீதம் வரி உயர்த்தியதில், பெரிய பாதிப்பும் இல்லை. இரண்டாம் நிலை வரியாக, 25 சதவீதம் உயர்வு எதிர்பாராதது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க ஆர்டர், அதிகபட்ச ஆடைகளை கொள்முதல் செய்யும். ஒவ்வொரு வர்த்தகரும், லட்சக்கணக்கில் ஆடைகளை வாங்குவர்.
அமெரிக்க கொள்முதல் அதிகம்
அமெரிக்க மக்கள், அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு 'வாஷிங்' அளவுக்கு மட்டுமே, ஒரு ஆடையை பயன்படுத்துகின்றனர். பிறகு புதிய ஆடை அணிய துவங்குவர். இதனால், அமெரிக்க மக்களின் ஆடை நுகர்வு உலக அளவில் அதிகம். வர்த்தகர்களும், அதிக அளவு ஆடைகளை இருப்பு வைத்து விற்க வேண்டும் என்பதால், ஆண்டு முழுவதும், இந்தியாவில் இருந்து அதிக அளவு கொள்முதல் செய்து வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல், ஜூன் மாதம் வரையில் பெற்ற முதல்கட்ட ஆர்டர்கள், எவ்வித பிரச்னையும் இல்லாமல் ஏற்றுமதியாகிவிட்டது. அதற்கு பிறகு பெற்ற ஆர்டர்கள் தான், உற்பத்தி படிநிலையில் இருக்கும் போதே, இரண்டாம் நிலை வரியாக, 25 சதவீதம் உயர்ந்தது, பேரிடியாக இருந்தது.
ஏற்றுமதியாளர் சமாளிப்பு
மனம்தளராத ஏற்றுமதியாளர்கள், தங்களது வர்த்தகர்களுடன் பேசி, வரி உயர்வு செலவுகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு பலமானது; வரி உயர்வு தற்காலிகமானது. விரைவில் சுமூக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நஷ்டம் ஆனாலும், ஆர்டர்களை முடிக்கவும் தயாராகிவிட்டனர்.
நம்பிக்கை உள்ளது...
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, அமெரிக்க வர்த்தகர்களுடன் வர்த்தகம் செய்து வருகிறோம். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினோம். திடீரென வரி உயர்வு என்பதற்காக, உடனடியாக வேறு நாடுகளுக்கு மாறிவிட முடியாது. பேச்சுவார்த்தை வாயிலாக, நிலைமையை விளக்கி, செலவுகளை பகிர்ந்து கொண்டோம். குறு, சிறு நிறுவனங்கள், வர்த்தக உறவை நிறுத்தி கொண்டன.
நீண்ட நாள் தொடர்புள்ள நிறுவனங்கள் மட்டும், முதல்கட்ட வரி 25 சதவீதத்துடன், 10 சதவீத கூடுதல் வரியை, வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டனர். மீதியுள்ள, 15 சதவீதத்தை, தலா, 7.5 சதவீதம் என்று பகிர்ந்த கொண்டனர்; சில நிறுவனங்கள், 10:5 என்ற அளவில் பகிர்ந்து கொண்டன. இதற்காக, டிச., வரை புதிய ஒப்பந்தம் செய்துள்ளோம். திடீரென அமெரிக்க வர்த்தகத்தை நிறுத்தினால், ஆர்டர் நமது போட்டி நாடுகளுக்கு சென்றுவிடும்; மீண்டும் திரும்ப பெறுவது சிரமம். நீண்டநாளைய வர்த்தக உறவு பாதிக்கக்கூடாது என, இருதரப்பும் நினைக்கிறது.
அதற்குள் வரி உயர்வு பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்; நம்பிக்கையை வலுவூட்டும் வகையில், நவ., மாத இறுதியில், 2வது நிலை வரி, 25 சதவீதம் வாபஸ் ஆகுமென தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதற்குள், தற்போதைய சீசனையும், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்கான அடுத்த சீசனையும் (அக்., - டிச.,) முடித்துவ விடுவோம். அதன்பின்னரும், வரி உயர்வு குறையாதபட்சத்தில், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் செய்யவும், தற்போதே தயாராகி விட்டோம்.
- திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்