/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் ஜாலியாக மருத்துவமனை நடத்தியது எப்படி?
/
திருப்பூரில் ஜாலியாக மருத்துவமனை நடத்தியது எப்படி?
திருப்பூரில் ஜாலியாக மருத்துவமனை நடத்தியது எப்படி?
திருப்பூரில் ஜாலியாக மருத்துவமனை நடத்தியது எப்படி?
ADDED : மே 24, 2025 11:20 PM

திருப்பூர்: திருப்பூர், முருகம்பாளையம், சூர்ய கிருஷ்ணா நகரில், முறையான ஆவணமின்றி, மருந்து கடை நடத்தியதோடு, அதற்குள் படுக்கை வசதியுடன் கிளினீக்கும் நடத்தி வந்த, ஜோலி அகஸ்டியன், 65, என்பவர், நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜோலி அகஸ்டின் சிக்கியது குறித்து, மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் கூறியதாவது:
போலி டாக்டர் ஜோலி அகஸ்டின் தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டால், நோயாளிகள் தன்னை நாடாமல் வேறு பக்கம் சென்று விடுவார்கள் என எண்ணி, சாம்பல் நிற 'சபாரி ஷூட்' அணிவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிற 'சபாரி ஷூட்' உடை மட்டுமே அணிந்து, ஆடையை பார்த்தலே 'இவர் தான் டாக்டர்' என காட்டிக் கொள்ள பெரு முயற்சி எடுத்துள்ளார்.
வசந்தம் கிளினிக், பிரகாஷ் மெடிக்கல், இமலாயா மெடிக்கல் உள்ளிட்ட பெயர்களில் கிளினிக், மெடிக்கல் நடத்திய ஜோலி லேட்டர் பேடு, பில் பயன்படுத்தினால், சிக்கிக் கொள்வோம் என்பதில் தெளிவாக இருந்துள்ளார். சீட்டு வழங்குவது, மருந்து எழுதித்தருவது கிடையாது. 'ஸ்பாட்டில்' மருத்துவம் பார்த்து, அப்படியே மருந்து, மாத்திரை கொடுப்பது, ஊசி போடுவது இவரது பாணி.
ஒரு நோயாளியிடம், 100 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்றதால், அப்பகுதியில் வசிப்பவர் பலர்கள், 'குறைந்த செலவில் மருத்துவம் வீட்டுக்கு அருகில் கிடைக்கிறது' என நம்பி ஏமாந்துள்ளனர். பொதுமக்கள் எங்காவது அழைத்தால் நேரடியாக வீட்டுக்கு சென்று மருத்துவம் பார்த்து, மாத்திரைகளை கொடுத்து, 'ஜிபே' 'போன் பே'வில் பணம் பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கேள்வி கேட்ட மனைவி
திடீரென மருந்தகத்துக்குள் நுழைந்து போலீசார், மருத்துவத்துறையினர் அதிரடியாக சோதனையிட்ட, சான்றிதழ்களை கேட்ட போது சற்றும் சலனமில்லாமல் 'மெடிக்கல் கவுன்சில் விவரம்' என்னிடம் உள்ளது என பதில் அளித்து, தான் வாங்கியதாக சில 'சீல்டுகளை' காண்பித்துள்ளார். இதற்கு முன் இவர் பிடிபட்ட போது மருத்துவக்குழுவில் இருந்த அதிகாரிகள், 'ஏற்கனவே போலீசாரிடம் பிடிப்பட்டவை இவை எல்லாம். மீண்டும் அதே போல் சீல்டுகளை அடித்து, பார்வைக்கு வைத்துள்ளார்,' என்றனர்.
போலி டாக்டர் கைதானதை அறிந்து அப்பகுதியில் வசிப்போர் சிலர் அங்கு திரண்ட நிலையில், அவரது மனைவி, தனது கணவரை பார்த்து, 'நீ என்ன சேர்த்து வெச்சிருக்கிற உன்னை ஜாமினில் வெளியே கூட்டிட்டு வர்றதுக்கு. ஊருக்கே வைத்தியம் பார்த்த இப்படியொரு பேரு உனக்கு?,' என அவரிடம் கேள்வி கேட்டார்.
ஆனால், எதனைப்பற்றியும் கவலைப்படாத ஜோலி, 'ஜாலியாக' போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு, போலீசார், மருத்துவக்குழுவினர் கைதுக்கு போட்டோ எடுத்தபோது, சிரித்து கொண்டே 'போஸ்' கொடுத்தவாறு சிறைக்கு சென்றார்.
இவர் போலீசிடம் சிக்குவது இது நான்காவது முறை என்பதாலும், போலி மருத்துவம் காரணமாக, மக்கள் உயிருக்கு ஆபத்து என்பதாலும், ஜோலி அகஸ்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.