/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உபரி பட்ஜெட் சாத்தியமானது எப்படி ?
/
உபரி பட்ஜெட் சாத்தியமானது எப்படி ?
ADDED : பிப் 28, 2024 11:50 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் நீண்ட காலத்துக்குப் பின், தற்போது உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் வரியினங்கள் மற்றும் நிதி ஆதாரங்கள் அதிகரித்த நிலையில் இது தற்போது சாத்தியமாகியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 2024 -25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு இனங்களின் கீழ் வரவினமாக 1,576 கோடியே 40 லட்சம் ரூபாய்; உத்தேச செலவினமாக 1,575 கோடியே 53 லட்சம் ரூபாய்; இதன் மூலம் 87.36 லட்சம் ரூபாய் உபரியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டு குறிக்கோளுடன் கூடிய உத்தேச வரவு செலவு திட்டத்தில், வருவாய் நிதி ஆதாரம் 996.95 கோடி ரூபாய் வரவினமாகவும், அதன் மூலம் 988. 63 கோடி ரூபாய் செலவு; குடிநீர் வடிகால் நிதி வரவினம் 554.98 கோடி ரூபாய்; அதில் 563.19 கோடி ரூபாய் செலவு; ஆரம்பக் கல்வி நிதி வரவினம் 244.61 கோடி ரூபாய் வரவாகவும், 236.91 கோடி ரூபாய் செலவு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
n கடந்த 2023 -24ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் 1.59 கோடி ரூபாய் பற்றாக்குறையுடனும், 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 10 கோடி ரூபாய் பற்றாக்குறையுடனும் தாக்கலானது.
தொடர்ந்து பல ஆண்டுகளாகவே பற்றாக்குறை பட்ஜட் தாக்கல் செய்த மாநகராட்சியில் தற்போது உபரி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது.
வரும் நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதி ஆதாரங்கள், மானியங்கள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்த்தப்பட்ட வரியினங்கள்; புதிய வரி விதிப்புகள் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய்க்கு வழி ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் துவங்கப்பட்டுள்ள வருவாய் வழங்கும் திட்டங்கள்; வரும் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு வரவுள்ள திட்டப்பணிகள் மூலம் அதிகளவில் நிர்வாகத்துக்கு வருவாய் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

