/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எவ்வளவு பேர் நீக்கம்? எஸ்.ஐ.ஆர். திக்... திக்
/
எவ்வளவு பேர் நீக்கம்? எஸ்.ஐ.ஆர். திக்... திக்
ADDED : டிச 11, 2025 04:52 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன;அக். 27 நிலவரப்படி, மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்.
விடுபட்ட வாக்காளர்கள், இன்று மதியத்துக்குள், பூர்த்தி செய்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.க்கள்) வசம் ஒப்படைக்க வேண்டும் என, தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தீவிர திருத்தத்தில், இறந்த வாக்காளர், இரட்டை பதிவு வாக்காளர்கள், திருப்பூரிலிருந்து நிரந்தரமாக இடம்பெயர்ந்து சென்ற வாக்காளர்கள், கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட உள்ளன; அவர்களின் பெயர்கள், வரும் 16ல் வெளியாகும் வரைவு பட்டியலில் இடம்பெறாது.
சமர்ப்பிக்காத படிவங்கள் திருப்பூர் மாவட்டத்தில், இறந்த வாக்காளர், இடம்பெயர்ந்தோர், இரட்டை பதிவு வாக்காளர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். திருப்பூர், வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்ட பனியன் தொழிலாளர் ஏராளமானோர், சொந்த ஊர் ஓட்டுரிமையே போதும் என்கிற அடிப்படையில், திருப்பூரில் கணக்கீட்டு படிவம் சமர்ப்பிக்காமல் உள்ளனர். அந்தவகையில், எட்டு சட்டசபை தொகுதிக்கான பட்டியலில் இருந்து, 15 சதவீத வாக்காளர்கள், அதாவது, 3.60 லட்சம் பேருக்கு மேல் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.
தீவிர திருத்த கணக்கீடு படிவம் வழங்கப்பட்ட வாக்காளர்கள்; பூர்த்தி செய்து பெறப்பட்ட படிவங்கள் எண்ணிக்கை மற்றும் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் விரைவில் வெளியிடுவார்; அப்போதுதான் துல்லியமாகநீக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதியுள்ள வாக்காளர்: மீண்டும் சேர வாய்ப்பு: தகுதியுள்ள வாக்காளராக இருந்து, தீவிர திருத்தத்தின்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், அந்தந்த சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் மேல் முறையீடு செய்து, பட்டியலில் மீண்டும் சேர வழி உள்ளது.

