UPDATED : ஆக 07, 2025 07:21 AM
ADDED : ஆக 06, 2025 11:04 PM

திருப்பூர்; நொய்யல் நதி தொடர்பான கள ஆய்வை மேற்கொண்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம்' (WWF), 'நம்ம திருப்பூர்' செயலி வாயிலாக, திருப்பூர் மாநகர மக்கள் தினசரி பயன்படுத்தும் நீரின் அளவு, வார்டு வாரியாக உள்ள நீர்நிலை விவரத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
காவிரி நிதியின் கிளை ஆறான நொய்யல் ஆறு, கோவையில் துவங்கி திருப்பூர் வழியாக கரூர் சென்றடைந்து, காவிரியில் கலக்கிறது. நொய்யல் நதியின் தற்போதைய நிலை, நீர் மாசுபட காரணம், அதை துாய்மைப்படுத்துவதற்கான திட்டம் குறித்த கள ஆய்வில், 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம்' ஈடுபட்டு வருகிறது.
'நம்ம திருப்பூர்' செயலியில்...
இதன் ஒரு கட்டமாக, திருப்பூர் மாநகர மக்கள், தினமும் பயன்படுத்தும் நீரின் அளவு, வார்டு வாரியாக உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை, அதன் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை, திருப்பூர் மாநகராட்சியின் அதிகாரபூர்வ 'நம்ம திருப்பூர்' செயலி உதவியுடன் ஆவணப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய தேவை சார்ந்த புகார்களை பதிவு செய்வதற்கான தளங்கள், ஏற்கனவே அந்த செயலியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நீர் பயன்பாடு குறித்த விவரம் பதிவு செய்ய, 'வாட்டர் புட் பிரின்ட்' என்ற பிரத்யேக தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
முழுமையான விவரம் அதில், குடியிருப்புவாசிகளின் பெயர், தொடர்பு எண், மண்டலம், வார்டு எண், பகுதி, வீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. குடியிருக்கும் வீடு தனி வீடா, அபார்ட்மென்டா; வீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருக்கிறதா; அதன் கொள்ளளவு; ஒரு வாரத்தில் எத்தனை முறை தொட்டி நிரப்பப்படுகிறது; வீட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர்; வழக்கமான நாட்களில் வாளி அல்லது ஷவர் உதவியுடன் குளிக்கும் விவரம்; எத்தனை வாளி நீர் தேவைப்படும்; குளிப்பதை தவிர, தினமும் குளியலறை பயன்படுத்தும் நேரம்; ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிப்பறை சுத்தம் செய்யப்படுகிறது; தினம் சமையலறை குழாயை இயக்கும் நேரம்; துணி துவைக்கும் முறை; வீட்டு தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சும் முறை; கார், பைக் இருந்தால் சுத்தம் செய்யும் முறை போன்ற தினசரி நீர் பயன்பாடு அத்தனை விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
நொய்யல் மற்றும் நீர் நிலைகளின் துாய்மையை நோக்கமாகக் கொண்டு இந்தப் புள்ளிவிவரங்கள் பெறப்படுகின்றன.