/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீன்களை எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறை விளக்கம்
/
மீன்களை எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறை விளக்கம்
மீன்களை எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறை விளக்கம்
மீன்களை எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறை விளக்கம்
ADDED : ஜன 21, 2024 11:46 PM
உடுமலை;நல்ல மீன்களை எப்படி பார்த்து வாங்குவது என்பது குறித்து, பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், தாலுகா அளவிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது, கடைகள் தோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தும் அலுவலர்கள், ஏதேனும் குறை கண்டறியப்பட்டால், அபராதம் விதித்தும் வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் தென்னம்பாளையத்தில், ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, 30 இறைச்சிக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, மீன்களின் தரம் பரிசோதிக்கப்பட்டது.
அதில், கெட்டுப்போன இரண்டு கிலோ மீன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
மீன் விற்பனையாளர்கள், விற்பனை செய்யும் இடத்தை துாய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். இருப்பு வைக்கப்படும் மீன்களை, சரியான வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும்.
முதலில் கொண்டு வரப்படும் மீன்களை, முதலில் விற்பனை செய்யும் முறையை கடைபிடிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை வழங்கிய உரிமத்தை, கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.
கெட்டுப்போன, பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது. மீன் கொள்முதலுக்கான ரசீதுகளை முறையாக பராமரிக்க வேண்டும். மீன் இருப்பு வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதேபோல, மீன் வாங்கும் மக்கள், மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும்.
மீன்களில் மையப்பகுதியில் லேசாக அழுத்தும்போது, அந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.