ADDED : அக் 09, 2024 12:36 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் வடக்கு தொகுதியில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் தெற்கு தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் முன்னிலையில், அனைத்து பகுதிகளிலும், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கட்சியினர் கருப்பு நிற ஆடை அணிந்து, போராட்டத்தில் பங்கேற்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதேபோல், மாநகராட்சியின், 44வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் தலைமையில், காங்கயம் கிராஸ் ரோடு பகுதியிலும், தென்னம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட, 42வது வார்டு வெள்ளியங்காடு, சந்திராபுரம், கருவம்பாளையம் பகுதிகளில் நடந்த போராட்டத்துக்கு, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
l அவிநாசி ஒன்றிய, நகரம் சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் முன் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின், ஐ.டி., பிரிவு மாநில பொறுப்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில், வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, நகர பொறுப்பாளர் ஜெயபால், ஜெ., பேரவை செயலாளர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
l பூண்டி நகராட்சி அலுவலகம் முன் நகர செயலாளர் பழனிசாமி தலைமையில், மாவட்ட இணை செயலாளர் லதா முன்னிலையில் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் கணேஷமூர்த்தி பங்கேற்றனர்.
