/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனிதர்களே ஜாக்கிரதை... எச்சரிக்கும் நாய்கள்?
/
மனிதர்களே ஜாக்கிரதை... எச்சரிக்கும் நாய்கள்?
ADDED : செப் 22, 2024 05:34 AM
ஆள், அரவமற்ற இரவில், அதுவும், நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது என்பது சமீப நாட்களாக 'திகில்' நிறைந்த அனுபவமாக மாறி விட்டது. அதற்கு காரணம் நாய்கள். எங்கிருந்தோ கூட்டமாக வரும் அவைகளில், ஒன்றிரண்டு குரைக்க ஆரம்பித்தால், மீதமுள்ளவைகளும் கோஷ்டியில் ஐக்கியமாகி விடுகிறது.
குறிப்பாக, கோழி, ஆடு, மீன் இறைச்சிக்கடை இருக்கும் இடங்கள், ஓட்டல் மற்றும் உணவு கழிவுகள் கொட்டப்படும் இடங்களில், நாய்கள் 'மாநாடு' நடத்துவதை நாள் தோறும் பார்க்க முடியும். அதிலும், அவற்றின் இனப்பெருக்க காலமான, செப்., துவங்கி நவ., வரை ஒன்றுமே சொல்ல முடியாது.
வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் என்றாலே, செல்லப்பிராணி என்ற பொதுவான கருத்து இருந்தாலும், தெருவில் சுற்றும் நாய்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது என்பதை, நாய்க்கடி வாங்கியவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
அதிலும், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி வருகிறது. குறிப்பாக, இரவு, 11:00 மணிக்கு துவங்கி, அதிகாலை, வரையும் இவற்றின் தொந்தரவால், பொதுமக்கள் படதாபாடுபடுகின்றனர் என்பதே நிதர்சனம்.
குறிப்பாக, அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு, பல்லடம் மற்றும் மங்கலம் ரோடு உள்ளிட்ட பிரதானமான பகுதிகளில், நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதும், வாகன ஓட்டிகளை துரத்தி நிலைகுலைய செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
ஒரு சிலர் நாயிடம் கடி வாங்கி, காயத்துடன் வீடு திரும்புகின்றனர். நாய்கள் பிடிப்பது, இனப்பெருக்கத்தை தடுக்க, கருத்தடை செய்வது ஒருபுறம் இருந்தாலும், நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சாலையில் தனியே நடந்து செல்லும் பாதசாரிகள் கூட ஒரு வித பயத்துடன் கண்ணும் கருத்துமாகவே நடந்து செல்லவே வேண்டியுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, மே முதல், ஆக., வரையிலான நான்கு மாதத்தில் நாய்க்கடி சிகிச்சைக்கு மட்டும், 4,991 பேர் அனுமதிக்கப்பட்டனர். மாதந்தோறும், 1,250 முதல், 1,350 பேர் வீதம், தினசரி, 35 முதல், 45 பேர் அனுமதியாகின்றனர்.
தடுப்பூசி அவசியம்!
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி, நாய்க்கடி சிறப்பு பிரிவு மருத்துவர்கள் கூறியதாவது:
நாய் கடித்து விட்டால், நாய் கடித்த இடத்தை தண்ணீரில் சுத்தமாக முதலில் கழுவ வேண்டும். நாய் கடித்த அன்றைய தினமே தடுப்பூசி போட்டு விட வேண்டும். மூன்று, ஏழு மற்றும், 14வது நாள், 28வது நாள் என ஐந்து தடுப்பூசிகள் உண்டு. உங்களை நாய் கடித்த தன்மை, காயத்தின் ஆழத்துக்கு ஏற்ப ஊசிகள் வகைப்படுத்தி போட வேண்டும்.
நாய் கடித்த அனைவரும் ஐந்து ஊசி போட வேண்டும் என்ற அவசியமில்லை. நாய்க்கடி தடுப்பூசி மேம்படுத்தப்பட்ட, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படுகிறது; சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குறிப்பாக, கோழி, ஆடு, மீன் இறைச்சிக்கடை இருக்கும் இடங்கள், ஓட்டல் மற்றும் உணவு கழிவுகள் கொட்டப்படும் இடங்களில், நாய்கள் 'மாநாடு' நடத்துவதை நாள் தோறும் பார்க்க முடியும்