
'இளைத்தல்' என்பது உடல் நலிவுறுவதை மட்டுமல்ல; நாடு, குடும்பம், சமுதாயம் இளைத்திருத்தலையும் குறிக்கும். இவை நலிவுறுவது இகழ்ச்சிக்குரியது என்கிறார் பாரதியார்.
திருப்பூர் பின்னலாடைத் தொழில் பலகட்ட சோதனைகளைச் சந்தித்து வருகிறது. 'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' என்ற மாபெரும் சாதனை திருப்பூருக்கு சொந்தமாகிவிட்டது என்று தொழில்துறையினர் பிரகடனம் செய்கின்றனர்.
இக்கட்டான இந்நிலையில், சொத்து வரி உயர்வு, வாடகை கட்டடங்களுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பு என்பது மாபெரும் 'இடி'யாக இறங்கியுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ''திருப்பூர் பின்னலாடை சாம்ராஜ்யம், கடந்த 50 ஆண்டுகால உழைப்பால் எழுப்பப்பட்டது. தொழில் வேறு பகுதிகளுக்கு நகர்ந்துவிட்டால், மீண்டும் திருப்பூருக்கு கொண்டுவருவது குதிரை கொம்பாகிவிடும். மத்திய அரசு உதவியை எதிர்பார்த்து இருக்காமல், மாநில அரசு தொழிலை பாதுகாத்து தக்கவைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.