ADDED : நவ 17, 2025 01:28 AM

திருப்பூர்: ''சிரிப்பு என்பது வெளியே இல்லை; நமக்கு உள்ளேதான் இருக்கிறது; நாம் அனைவரும் ரசித்து, சிரித்து வாழ வேண்டும்,'' என, சொற்பொழிவாளர் சாந்தாமணி பேசினார்.
திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில், 'சிரிப்போம்… சிந்திப்போம்' நகைச்சுவை நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நகைச்சுவை முற்றம் டிரஸ்ட் பொதுசெயலாளர் முரளி வரவேற்றார்.இந்திய மருத்துவ சங்க தலைவர் பிரேமலதா கோவிந்தராஜ் தலைமை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் பூபதிராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிரிப்பது, மரியாதை குறைவல்ல சொற்பொழிவாளர் சாந்தாமணி, 'மகிழ்ச்சி எனும் மத்தாப்பு' என்ற தலைப்பில் பேசியதாவது:
வாழ்வில் நடக்கும் சிறிய விஷயத்துக்கும் பாராட்ட வேண்டும். அப்போதுதான், நமது மனதில் மகிழ்ச்சி பிறக்கும். இறைவன் அளித்த வாழ்க்கையை, ரசித்து, ருசித்து வாழ வேண்டும். பொது இடங்களில் சிரிப்பது மரியாதை குறைவான விஷயம் என்று தவறான நினைக்கின்றனர். ஆறு மாத குழந்தை, தினமும், 200 முறை சிரி க்கிறது; இளைஞனாக வளர்ந்த பிறகு, 15 முறை மட்டுமே சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிரிப்பு என்பது வெளியே இல்லை; நமக்கு உள்ளேதான் இருக்கிறது; ரசித்து, சிரித்து வாழ வேண்டும்.
இவ்வாறு, சாந்தாமணி பேசினார்.
மாற்றத்துக்கு தயாராகுங்கள் சொற்பொழிவாளர் ராகவேந்திர ன்:,
'வாழ்க்கையை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் பேசுகையில்,''பள்ளி, கல்லுாரிகளில் மொபைல் போன் அனுமதிக்கப்படாமல் இருந்தது; கொரோனாவுக்கு பிறகு, மொபைல் போனில் தான், பள்ளி, கல்லுாரிகள் இயங்கின. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றத்துக்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்,'' என்றார்.

