/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பெற்றோர் வாசித்தால் குழந்தைகளும் வாசிப்பர்'
/
'பெற்றோர் வாசித்தால் குழந்தைகளும் வாசிப்பர்'
ADDED : பிப் 03, 2024 11:51 PM
புலவர் செந்தலை கவுதமன் பேசியதாவது:
புத்தகம் படிப்பது, வரலாற்றை தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, சுயநலனும் இருக்கிறது; ஆம், புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவருக்கு, உணர்ச்சி சார்ந்த நோய்கள் வராது. நேரம் கிடைக்கும் போதெல்லாம், 'மொபைல்' போன்களை பார்த்து வந்தால், அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின் பார்வை பழுதுபடும்.
புத்தகம் படிக்கும் போது, அதில் வரும் பாத்திரங்களை, நடிகராக, உறவினராக, நண்பர்களாக கற்பனை செய்யும் ஆற்றல் பிறக்கும். புத்தகம் படிப்பதால், கற்பனையும் வளரும். 'டிவி' மற்றும் 'மொபைல்' போனை பார்ப்பதால், கற்பனை சக்தி குறைந்துவிடும்.
குழந்தைகள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும், 10 முதல், 30 நிமிடத்துக்கு மேல், 'மொபைல்' போன்களை பார்க்க அனுமதிக்க கூடாது. 'ெஹட்போன்' கொண்டு காதில் கேட்டு வந்தால், செவிப்பறை பழுதாகும். வந்தால் பார்க்கலாம் என்று இருந்துவிடக்கூடாது; கட்டாயம், 15 ஆண்டுகளுக்கு பின் பாதிப்பு வரும்.
'பட்டால் தான் தெரியும் முட்டாளுக்கு' என்பார்கள். எனவே, வருவற்கு முன் எண்ணிப்பார்க்க வேண்டும். வந்தால் பார்க்கலாம் என்று இருந்து விடக்கூடாது. மனம் ஒன்றி புத்தகம் படிக்கும் போது, ஆழ்கவனம் வந்துவிடும். உணர்ச்சிகளை துண்டித்து விடும்.
புத்தக வாசிப்பு, ஒற்றை சிந்தனையை கொண்டு வரும். மனம் ஒன்றி புத்தகம் வாசிப்பதால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, சர்க்கரை போன்ற உணர்ச்சி சார்ந்த நோய் வராது; அப்படியே வந்தாலும், வீரியம் குறைவாக இருக்கும்.
புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை, பெற்றோர் முதலில் பின்பற்ற வேண்டும். அப்போதுதான், குழந்தைகளும் வாசிப்பை விரும்புவார்கள். 'சொல்வதை செய்ய வேண்டும்; செய்வது போல் சொல்லக்கூடாது,' என அறிவுறுத்த வேண்டும்.