/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிரடி தொடர்ந்தால் ஆஸி.,யை வீழ்த்தலாம்
/
அதிரடி தொடர்ந்தால் ஆஸி.,யை வீழ்த்தலாம்
ADDED : டிச 01, 2024 11:16 PM

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 'பார்டர் கவாஸ்கர் டிராபி' ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடும் போட்டி நிறைந்த இத்தொடரை இந்தியா கைப்பற்றுமா அல்லது ஆஸி., வெல்லுமா என்ற 'சஸ்பென்ஸ்' நிலவுகிறது. 'பும்ரா - ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரின் அதிரடி தொடர்ந்தால் ஆஸி.யை வீழ்த்தலாம்' என்கின்றனர், திருப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்கள்.
போட்டியை மாற்றிய பும்ரா
பிரபாகரன், குமார் நகர்: பும்ரா சாதித்துள்ளார். ஆஸி., அணியின் 'டாப் 5' பேட்ஸ்மேன்கள் ரன் வேகத்தை, 60 ரன்களுக்குள் தடுத்துள்ளார். வழக்கமாக, டெஸ்ட் கிரிக்கெட் இரண்டாவது நாளுக்கு பின், சுழல் பந்து தான் எடுபடும். மாறாக, பும்ராவால் போட்டியே இந்தியாவுக்கு சாதகமாக மாறி விட்டது. அடுத்தடுத்து வரும் போட்டிகளிலும் அசத்துவார். பேட்டிங்கில் அசத்தல் தொடர்ந்தால், தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு உண்டு.
ஜெய்ஸ்வால் - ராகுல் கூட்டணி
ரமேஷ்குமார், தினசரி மார்க்கெட் வீதி: கிடைத்த வாய்ப்பை ஜெய்ஸ்வால் - ராகுல் கூட்டணி மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு, 201 ரன் சேர்த்து, வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்ததால் தான், ஆஸி., அணிக்கு, 500க்கும் மேல் வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. பவுலிங்கில் பும்ரா - சிராஜ் கூட்டணி அசத்துவதால், வரும் போட்டிகளில் வெற்றி நிச்சயம். குறிப்பாக, கேப்டனாக பணியாற்றி, பந்து வீச்சிலும் அசத்திய பும்ரா பாராட்டப்பட வேண்டியவர்.
பெர்த்தில் முதன்முறை வெற்றி
சரவணக்குமார், 15 வேலம்பாளையம்: பெர்த்தில் இதற்கு முன் வெற்றியே பெறாமல் இருந்த இந்திய அணி, முதல் முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது. முதல் டெஸ்ட் வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில், இந்தியா முதலிடத்துக்கு வந்து விட்டது. அதே நேரம், அடுத்த இடத்தில் ஆஸி., இருப்பதால், அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், நிலை மாறிவிடும். இந்திய அணி அடுத்தடுத்த தொடர் வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.
'பார்ம்'மை மீட்ட கோலி
தவுபிக், பாண்டியன் நகர்: போட்டி துவங்கியதும் முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால், நியூஸி., தொடரை போல் ஏமாற்றம் மிஞ்சுமோ என எண்ணத்தோன்றியது. இழந்த 'பார்ம்'மை மீட்டு, கோலி 30வது சதம் விளாசியுள்ளார். ஜெய்ஸ்வால் ஆட்டம் சூப்பராக இருந்தது. முதல் முறையாக ஆஸி., தொடரில் பங்கேற்ற போட்டியிலேயே, ஜெய்ஸ்வால் அசத்தியிருப்பதால், இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருப்பதால், இவர் மீதான எதிர்பார்ப்பு கூடுகிறது. கோலி கூடுதல் ரன் குவிக்க வாய்ப்புள்ளது. ஆஸி., அணிக்கு எதிராக அதிக ரன் குவித்தால் தொடரை வெல்லும் வாய்ப்பு உருவாகும்.