/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டுயிர்களும் அழிந்து போனால்...
/
காட்டுயிர்களும் அழிந்து போனால்...
ADDED : செப் 20, 2024 05:50 AM
''மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே, இது மாறுவதெப்போ, தீருவதெப்போ நம்ம கவலை...'' கடந்த, 1956ல் வெளியான 'தாய்க்கு பின் தாரம்' படத்தில், இடம் பெற்ற பாடல் வரிகள் தான் இவை.
இந்த பாடலை இப்போது நினைவுப்படுத்த துவங்கியிருக்கின்றன, ஆப்ரிக்க நாடுகள். ஆம், கடும் வறட்சியால் உணவுக்கு திண்டாட்டம் ஏற்பட்ட நிலையில் விலங்குகளை வேட்டையாடி உண்ணும் நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். நமீபியாவில், யானைகளை கொன்று, மக்களுக்கு உணவாக வழங்க அந்நாட்டு அனுமதி வழங்கியிருக்கிறது. அதனை தொடர்ந்து, ஜிம்பாப்வே அரசும், 200 யானைகளை கொன்று, மனிதர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது.
'யானைகளுக்கு அடுத்து, மனிதர்களையும் அடித்து தின்பார்களா?' என்ற கேள்வி, கானுயிர் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தாலும், அதற்கு விடை சொல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம். 'இந்த அவலம், ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வு என, கடந்து போய்விடக்கூடாது; உலகளாவிய பிரச்னையாக பார்க்க வேண்டும்' என்கிறார், சுற்றுச்சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம்.
அவர் மேலும் கூறியதாவது: ஆப்பிரிக்க கண்டத்தில், 2 லட்சம் யானைகள் இருக்கின்றன. அதிகளவு யானைகள் வசிக்கும் ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட, 5 நாடுகளில், கடந்த நான்காண்டாக மழையில்லை. அதேநேரம், ஐரோப்பிய நாடுகளில், அந்த நான்காண்டில் கூடுதலான மழைப் பொழிவு இருந்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் வேளாண்மை தொழில் அறவே நின்றுவிட்டது; தொழில் வளர்ச்சியிலும் பின்தங்கிய நாடுகளாகவே அவை உள்ளன.
திடீரென, 9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உயர்ந்து, மேல் மண்ணில் இருந்து, 6 அடி ஆழம் வரை நுண்ணுயிர்களை அழித்திருக்கிறது. அந்த மக்கள் தங்கள் பசியை தீர்க்க மரம், மட்டை என அனைத்தையும் தின்றுவிட்டார்கள். இனி, அவர்களின் பசி தீர்க்க காட்டு விலங்குகள் மட்டுமே உள்ளன என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது, இயற்கை பேரிடரின் மிகப்பெரும் துயரம், உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி, அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருந்து வழங்கும் பொறுப்பு, உலக நாடுகளுக்கு உண்டு. காட்டு விலங்குகள் அழிந்த பின், மழை பெய்தாலும், அங்குள்ள விவசாய நிலங்கள் தங்கள் தன்மையை இழந்து விடும்; அம்மண்ணில் மண்ணுயிர்கள் இறந்துவிட்டன.
காட்டுயிர்களும் அழிந்து போனால் அந்த மக்கள் எதை சாப்பிடுவார்கள் என்ற கேள்விக்கு, தற்போதுள்ள கானுயிர் ஆர்வலர்கள், மவுனத்தையே பதிலாக தருகின்றனர். ஐ.நா.,சபை, யுனெஸ்கோ போன்றவற்றின் வாயிலாக, அந்நாடுகளுக்கு பிற நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
வெப்ப மண்டல நாடுகளில், கடந்த ஐந்தாண்டில், 9 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் உயர்ந்திருக்கிறது; மிகக்கடும் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்திருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டும்.
இதனை ஆப்பிரிக்கா சார்ந்த ஒரு விஷயமாக மட்டும், கடந்து விட முடியாது. மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான, மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது. நிலம், நீர், காற்று, நிலக்கரி உள்ளிட்ட பொதுவான வளங்களில், 85 சதவீத வளங்களை ஏற்கனவே எடுத்து விட்டோம்; எஞ்சியுள்ள வளங்களை, எத்தனை தலைமுறைக்கு விட்டு செல்ல முடியும் என சிந்திக்க வேண்டும். வெப்ப மண்டல நாடுகளின் வரிசையில் இந்தியாவும் உள்ளது. எனவே, சுற்றுச்சூழல், மழை வளம், மண் வளம், விவசாயத்தை பேணி பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு அவசியம் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஐந்தாண்டில், 9 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் உயர்ந்திருக்கிறது; மிக கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்திருக்கிறது வருவதையும் உற்று நோக்க வேண்டும்