ADDED : ஏப் 16, 2026 02:50 AM
திருப்பூர்: 'ஓட்டு கேட்டு வந்தால் கொலை செய்வோம்' என, தாராபுரம் தொகுதி தி.மு.க, வேட்பாளருக்கு, 'கூரியர்' வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளரான டாக்டர் இந்திராணி, கூட்டணி கட்சியினருடன் தொகுதி முழுதும் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த, 13ம் தேதி மூலனுார் ஒன்றியத்துக்குட் பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தாராபுரத்திலுள்ள அவரின் மருத்துவமனைக்கு கூரியர் ஒன்று வந்தது.
வேட்பாளரின் மகள் புனிதா, அதனை வாங்கி, பிரித்து பார்த்தபோது, 'ஓட்டு கேட்டு தொகுதிக்குள் வேட்பாளர் வந்தால், கொலை செய்வோம். எதற்கும் தயார். மக்களே, தயாராக இருங்கள்' என்பது உட்பட அவதுாறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
அதில், 'உதயகுமார் சிவில் டிரைவிங் ஸ்கூல், தாராபுரம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபாபு, போலீசில் அளித்த புகாரில், 'வேட்பாளரையும், அவரின் குடும்பத்தையும் அச்சுறுத்தும் வகையில் கூரியர் வந்துள்ளது. கொலை மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தாராபுரம் போலீசார், கூரியர் செய்த நபர் யார், எங்கிருந்து கூரியர் செய்யப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் மற்றும் 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
