/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்தால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!
/
காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்தால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!
காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்தால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!
காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்தால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!
ADDED : மே 09, 2025 06:42 AM
பல்லடம்: காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடையும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, அரசே அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்தது. மாநில செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் தலைமை வகித்து கூறியதாவது:
கொங்கு மண்டல பகுதியில் தோட்டத்து வீடுகளில் தங்கி இருக்கும் விவசாய குடும்பத்தினரை குறி வைத்து நடக்கும் குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இவ்வாறு, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்கள் இதற்கு உதாரணமாக உள்ளன.
இதனால், கிராமப்பகுதிகளில் வசிக்கும் விவசாய குடும்பத்தினர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. விவசாயிகள் அச்சத்தை போக்கும் வகையில், காவல்துறை இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது.
எதிர்காலத்தில் இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முந்தைய காலங்களில் இருந்ததைப் போன்று, பொதுமக்கள் அடங்கிய ஊர்காவல் படைகளை கிராமங்கள்தோறும் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடையும்போது, விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கின்றன.
குறிப்பாக, குறு, சிறு விவசாயிகள் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சியின்போது, தமிழக அரசே அவற்றை கொள்முதல் செய்து, விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பகுதியில், அப்பாவி பொதுமக்களை சுட்டு படுகொலை செய்த தீவிரவாதிகள் மீதான மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் கூண்டோடு வேட்டையாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.