/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உஷாராக இல்லாவிட்டால் உள்ளதெல்லாம் இழப்பீர்கள்
/
உஷாராக இல்லாவிட்டால் உள்ளதெல்லாம் இழப்பீர்கள்
ADDED : அக் 19, 2024 11:50 PM

திருப்பூர்: தீபாவளியையொட்டி, கடந்த சில நாட்களாக திருப்பூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர்.
இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். முக்கியமான, ஐந்து இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நின்று போலீசார் கண்காணிக்கும் வகையில் அமைத்துள்ளனர்.
கண்காணிப்பு கோபுரங்களில் 'சிசிடிவி' கேமராக்களையும் பொருத்தி உள்ளனர். மக்கள் கூடும் இடங்களில், வழிப்பறி திருடர்கள், 'ஜேப்படி' ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் 'மப்டி' உடையில் ரோந்து சென்று வருகின்றனர்.
வியாபாரிகளிடம் தகிடுதத்தம்
தீபாவளியையொட்டி, என்னதான் போலீசார் பாதுகாப்பு அளித்தாலும், கூட்டத்தை பயன்படுத்தி 'கல்லா'வில் உள்ள நபர்களை, திசை திருப்பி பொருட்களை எடுத்து செல்வது; பணத்தை கொடுக்காமல் கொடுத்தேன் என்று பிடிவாதம் பிடிப்பது; சில்லறை வாங்குவது போன்ற நுாதன மோசடியில் ஈடுபடும் கும்பல் மாநகருக்குள் வலம் வருகின்றனர். வியாபாரிகள் உஷாராக இருந்து பொருட்கள், பணம் போன்றவற்றை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், உடனே அருகே போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பண்டிகைக்கு ஊருக்கு கிளம்பும் மகிழ்ச்சியில் எண்ணம் முழுவதும் அதில் இருக்கும். பொது இடத்தில் மணிபர்ைஸ திறந்து பணம் எடுப்பது போன்றவை செய்ய வேண்டாம். பயணத்துக்கான சிறிய தொகையை மட்டும் கையில் வைத்து கொள்ளுங்கள்.
பயணத்தின் போது, மற்றவர்கள் பார்க்கும் போது, பர்ைஸ பேக்கில் வைப்பது, பணத்தை எண்ணுவது போன்றவற்றை செய்ய கூடாது.
கூட்டத்தில் மொபைல் போன், மணி பர்ஸ் போன்றவற்றை, உள்ளாடைக்குள் இருக்கும் வகையில் வைத்து கொள்ளுங்கள்.
பேன்ட் பின்புறம் மற்றும் முன்புறம் மணிபர்ஸ் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
தின்பண்டங்களை யார் கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம்.
விலை உயர்ந்த நகையை குழந்தைகளுக்கு அணிவது மற்றும் பெரியவர்கள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
இரவு பயணத்தின் போது, துாங்கும் போது பர்ைஸ உங்களுடனேயே வைத்து கொள்ளுங்கள்; பேக்கில் வைத்து மேலே வைப்பது போன்றவற்றை செய்ய வேண்டாம்.