/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமீறல் கட்டடங்கள்; அரசுக்கு வருவாய் இழப்பு
/
விதிமீறல் கட்டடங்கள்; அரசுக்கு வருவாய் இழப்பு
ADDED : பிப் 04, 2024 02:01 AM
விதிமீறல் கட்டடங்கள் கிராமங்களிலும் அதிகரித்து வருவதன் காரணமாக, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஊராட்சி பகுதிகளில், 2 ஆயிரம் சதுர அடிக்குள் உள்ள வணிக கட்டடங்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொழில்நுட்ப மற்றும் திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இரண்டு ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருந்தால் டி.டி.சி.பி., அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், பெரும்பாலான ஊராட்சிகள் இந்த விதிமுறையை பின்பற்று வதில்லை. மாறாக, 2 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கும் சில உள்ளாட்சி நிர்வாகங்கள் முறைகேடாக அனுமதி வழங்கி வருகின்றன.
உதாரணமாக, 10 ஆயிரம் சதுர அடி கொண்ட வணிக ரீதியான ஒரு கட்டடத்தை நான்காக பிரித்து, 2 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடமாக காட்டி, முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர, விதிமுறை மீறி கட்டப்படும் இது போன்ற கட்டடங்களுக்கு, உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்கும் அனுமதியின் அடிப்படையில், தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட இதர அனுமதிகளும் அடுத்தடுத்து வழங்கப்படுகின்றன.
வணிக ரீதியாக கட்டப்படும் கட்டடங்களின் பரப்பளவு, வேலை பார்க்கும் தொழிலாளர்கள், இயந்திரங்கள், உற்பத்தி உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில் கொண்டே, கட்டட விதிமுறைகளை பின்பற்றி கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
ஆனால், சில உள்ளாட்சி நிர்வாகங்களின் ஆதரவுடன் கட்டப்படும் இது போன்ற விதிமீறல் கட்டடங்களே, பின் நாளில், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கு காரணமாகின்றன. இவற்றை யார் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே, நகரப்பகுதிகளைப் போல், தற்போது கிராமங்களிலும் விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. தனிக்குழு அமைத்து இவற்றை கண்காணித்தால் மட்டுமே, விதிமீறல்களை தடுக்க முடியும். அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின், சிந்திப்பதை தவிர்த்து, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அரசு முன் வர வேண்டும்.