ADDED : அக் 01, 2025 12:11 AM

பெருமாநல்லூர்; திருப்பூர் ஒன்றியம், ஈட்டி வீரம்பாளையம் பகுதியில், 68 பேருக்கு, கடந்த, 1994ல் இலவச பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், சம்மந்தப்பட்ட இடத்தில் அளவீடு செய்து கொடுக்கவில்லை. இந்நிலையில், அரசு இலவச பட்டா வழங்கிய இடத்தில் ஒரு தரப்பினர் இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என அதில் கோவில் அமைத்து, சுற்றி வேலி அமைத்து, வழிபட்டு வருகின்றனர்.
இதனால், மா.கம்யூ. சார்பில், குடியேறும் போராட்டம் நேற்று நடந்தது. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பாலபாரதி, மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் மூர்த்தி என பலர் சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். போலீசார் தடுத்ததால், ரோட்டோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து வந்த திருப்பூர் ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், பேச்சுவார்த்தை நடத்தி, 'ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதனை அகற்றியதும், இடத்தை அளந்து கொடுக்கப்படும்,' என உறுதி கூறினார். இதனால், கட்சியினர் மற்றும் பயனாளிகள் கலைந்து சென்றனர்.