/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியில் திடக்கழிவு நடைமுறைகள் அமல்! மக்கள் இயக்கமாக முன்னெடுக்க திட்டம்
/
மாநகராட்சியில் திடக்கழிவு நடைமுறைகள் அமல்! மக்கள் இயக்கமாக முன்னெடுக்க திட்டம்
மாநகராட்சியில் திடக்கழிவு நடைமுறைகள் அமல்! மக்கள் இயக்கமாக முன்னெடுக்க திட்டம்
மாநகராட்சியில் திடக்கழிவு நடைமுறைகள் அமல்! மக்கள் இயக்கமாக முன்னெடுக்க திட்டம்
UPDATED : டிச 02, 2025 06:57 AM
ADDED : டிச 02, 2025 06:55 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டன. ''இதை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செயல்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்று மேயர் தினேஷ்குமார், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் அளவு குப்பை சேகரமாகிறது. இவற்றை கையாளும் வகையில் உரிய கட்டமைப்புகள் இல்லை. பெருமளவு குப்பை கழிவுகள் சுற்றுப்பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், மாநகராட்சி நிர்வாகம் மாற்று திட்டங்களை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக நடைமுறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டது. இதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதிகளவு கழிவு(பல்க் வேஸ்ட்) சேகரமாகும் நிறுவனங்கள், இறைச்சி கடை உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டங்களில் அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி, ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பொதுமக்கள் தரப்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கனவே மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது மற்றும் கண்காணிப்பு குறித்து சுகாதார பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கமிஷனர் அமித் முன்னிலை வகித்தார்.
பொதுமக்களின் கடமை மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:
திடக்கழிவு மேலாண்மையில் மாநகராட்சியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் முதல் அமலுக்கு வந்தது. இவை குறித்து சம்பந்தப்பட்டோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை சுகாதார பிரிவினர் கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2017ல் திடக்கழிவு மேலாண்மையில் விதிக்கப்பட்ட அபராதம் எதுவும் விதிக்கப்படாது. மாநகராட்சி பகுதி மக்கள் இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதை தங்கள் கடமையாக, கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மேயர் பேசினார்.
மண்டல குழு தலைவர்கள் கோவிந்தராஜ், மகேஸ்வரி, துணை கமிஷனர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் முருகானந்த் உள்ளிட்டோர் பேசினர். சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
நடைமுறை சிக்கல் குறித்து: வாரம் இருமுறை ஆய்வு:
குப்பை தரம் பிரிப்பு மையங்கள், உர உற்பத்தி மையங்கள் முழுமையாக விரைவாக செயல்பாட்டுக்கு வரும். இறைச்சி கழிவுகள் அகற்றுவதில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படும். வழிகாட்டு நெறிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதை சுகாதார பிரிவினர் உறுதி செய்ய வேண்டும். வாரம் இரு முறை இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் நிலையில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் தவிர்ப்பது, புதிய யோசனைகள் ஆகியன குறித்து அதில் விவாதிக்கப்படும். சுகாதார பிரிவினர் தினசரி பணி முன்னேற்றம் குறித்து உடனுக்குடன் அப்டேட் செய்ய வேண்டும்.
- அமித்
மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
திருப்பூர் மாநகராட்சியில் 'எனது குப்பை - எனது பொறுப்பு' என்ற திட்டத்தில், நகரின் துாய்மையைப் பாதுகாக்கும் விதமாகவும், நகரில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும் திடக்கழிவு மேலாண்மையில் சில நடைமுறைகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகம் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
குடியிருப்புகள்
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை (பச்சைத் தொட்டி) மற்றும் மக்காத குப்பை (நீலத் தொட்டி) எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பை தினமும், மக்காத குப்பையை வாரம்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமையிலும், மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள்
வணிக நிறுவனங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து மட்டுமே மாநகராட்சி வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும். தரம் பிரிக்காமல் வழங்கினாலோ அல்லது பொது இடங்களில் கொட்டினாலோ, அந்நிறுவனங்களின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும்.
தொழிற்சாலைகள்
மாநகராட்சிப் பகுதி தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை, மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மட்டுமே தினமும் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக, மின்னணுக் கழிவுகள் மற்றும் வீட்டுத் தீங்குறு கழிவுகளை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டுமே பெறப்படும். அந்த நாளில் மட்டும் ஒப்படைக்க வேண்டும்.
மொத்தக் கழிவு
உற்பத்தியாளர்கள் தினமும் 100 கிலோவுக்கு மேல் கழிவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் தங்கள் வளாகத்திலேயேஉரம் தயாரிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி அகற்ற வேண்டும். தவறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்.
இறைச்சி மற்றும் மீன் கடைகள்
இறைச்சிக் கழிவுகளைப் பொது இடங்களில் வீசக்கூடாது. அதை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட 'விக்கி டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்திடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கடை பூட்டி 'சீல்' வைப்பதோடு, கடும் அபராதமும் விதிக்கப்படும்.
மாலை நேர உணவகங்கள்
திருப்பூரில் பெருமளவு இரவு நேரங்களில் மட்டும் ெசயல்படும் டிபன் கடைகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

