/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க முக்கியத்துவம் கல்வித்துறை அறிவுறுத்தல்
/
பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க முக்கியத்துவம் கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க முக்கியத்துவம் கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க முக்கியத்துவம் கல்வித்துறை அறிவுறுத்தல்
ADDED : ஜன 19, 2024 11:31 PM
உடுமலை:அரசுப்பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு, மீண்டும் முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நாட்டுநலப்பணி திட்டம், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்களின் சார்பில், பல்வேறு சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டங்களின் ஒரு செயல்பாடாக, பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைக்கும் திட்டமும் துவக்கப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இடவசதியுள்ள பள்ளிகளில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தோட்டம் அமைக்கப்பட்டு செயல்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், பல பள்ளிகளில், திட்டம் துவக்கப்பட்டதோடு மாணவர்களின் ஈடுபாடு குறைந்து, செயல்பாடில்லாமல் உள்ளது. விவசாயம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவம், இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவிப்பதன் நன்மைகளை, மாணவர்கள் நேரடியாக அறிந்துகொள்வதற்கு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
கத்தரி, உருளை, தக்காளி மற்றும் கிழங்கு வகைகள் மட்டுமின்றி, கீரை வகைகளும் பயிரிட்டனர்.
தற்போது, ஒரு சில பள்ளிகளில் தான் இத்திட்டம், தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. மீதமுள்ள பள்ளிகளில், கவனிப்பில்லாமல், மாணவர்களிடம் ஊக்குவிப்பு குறைந்து, செயல்பாடில்லாமல் உள்ளது.
பள்ளிகளில் மீண்டும் இத்திட்டம் புத்துயிர் பெறும் வகையில், காய்கறித்தோட்டத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, பள்ளிமேலாண்மை குழுக்களின் ஒரு செயல்பாடாக கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கூட்டத்தில், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி, தொடர்ந்து பராமரிப்பதற்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு காய்கறி தோட்டம் அமைப்பது மற்றும் பராமரிக்கும் வழிமுறைகள், மண் புழு உரம் தயாரித்தல், விவசாயிகளிடம் வழிகாட்டுதல்களை பெறுதல், களப்பயணம் அழைத்துச்செல்லுதல், மற்ற பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைத்திருப்பதை காண்பித்தல் போன்ற பல செயல்பாடுகள் உள்ளன.
அனைத்து பள்ளிகளிலும் இதை செயல்படுத்தினால், மாணவர்கள் இயற்கையோடு இணைந்த கல்வியை பெற முடியும்.
இவ்வாறு கூறினர்.