/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 மாதத்தில், 285 பேருக்கு சிகிச்சை
/
10 மாதத்தில், 285 பேருக்கு சிகிச்சை
ADDED : நவ 02, 2024 11:08 PM
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த பத்து மாதத்தில், 285 பேருக்கு பாம்புக்கடிக்கான சிசிச்சை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பருவமழை காலம் என்பதால், பாம்பு உள்ளிட்ட ஊர்வன ரகங்கள் கடிக்கும் போது, மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என அரசு மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பாம்புக்கடிக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அளிக்க, இரண்டு டாக்டர், நான்கு செவிலியர் அடங்கிய பத்து பேர் கொண்ட குழு பணியில் உள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால், மழை நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து விடும் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட ஊர்வன விஷஜந்துகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, ஆறு, ஏரி, குட்டை உள்ளிட்ட நீர் வழித்தடங்களின் ஒரங்களில், குழந்தைகளுடன் வசிப்பவர்கள் மிகுந்த கவனம், விழிப்புடன் இருக்க வேண்டும்.
வீடுகளுக்கு அருகே, மறைவான இடங்களில் தண்ணீர் தேங்காமல், குழிகளுக்கு தண்ணீர் புகுந்து, ஓட்டையாக (வங்கு போன்று) இல்லாமல், தரைத்தளம் இருப்பதை அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும்.
ஈரப்பதத்துடன் வீடு இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறம் காற்றோட்டம், வெயில்படும் இடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இந்தாண்டு ஜன., - முதல் அக்., வரையிலான பத்து மாதத்தில், 178 ஆண், 95 பெண், 12 குழந்தைகள் என, 285 பேருக்கு பாம்புக்கடிக்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட சிகிச்சைகளில் இருந்து, தேறியவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 11 பேர் மட்டும் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாம்பு கடித்தவுடன்....
பாம்பு கடித்தவுடன் அருகில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒருவித யோசனை சொல்லி, அதனை செயல்படுத்தி பார்ப்பது, தாமதப்படுத்துவது தவறானது. பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுவது, நெருப்பு வைப்பது, கத்தியால் கீறிடுவது, மஞ்சள் அல்லது காபித்துாள் வைத்து சுய வைத்தியம் செய்வது கூடாது.
பாம்பு கடித்த இடத்தை சுத்தமாக கழுவி விட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். டாக்டர் கூறும் வழிமுறையை சரிவர பின்பற்ற வேண்டும். சரியான நேரத்துக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்றால் சிரமம்; உடல் நல குறைபாடு ஏற்பட்டு விடும். எனவே, பாம்பு கடித்தால் தாமதம் செய்யாமல், மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும்.
- மருத்துவர்கள்