/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டாம்கோ' திட்ட கடன் பெற வருமான உச்ச வரம்பு உயர்வு
/
'டாம்கோ' திட்ட கடன் பெற வருமான உச்ச வரம்பு உயர்வு
ADDED : நவ 24, 2024 04:01 AM
திருப்பூர் : 'டாம்கோ' கடன் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) சார்பில், கடன் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் இந்த கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளியாவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு, கிராமப்புறத்துக்கு, 98 ஆயிரம், நகர்ப்புறத்துக்கு 1.20 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் அனைவருக்கும், ஆண்டு வருமான உச்சவரம்பு, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, கடந்த அக். 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர், சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் கார்டு நகல் மற்றும் திட்ட தொழில் அறிக்கையுடன், கலெக்டர் அலுவலக வளாக முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.