/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்றங்கள் அதிகரிப்பு போதவில்லை போலீஸ்!
/
குற்றங்கள் அதிகரிப்பு போதவில்லை போலீஸ்!
ADDED : பிப் 03, 2024 11:40 PM
பல்லடம்:குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வரும் நிலையில், பல்லடம் உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு அதிக குற்ற சம்பவங்கள், விபத்துகள், உயிரிழப்புகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. தொழில் வளர்ச்சியால், பல்லடம் வட்டாரத்தின் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்பு தேடி, தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் பல்லடத்தில் தஞ்ச மடைகின்றனர். இதற் கிடையே சமூக விரோத செயல்கள் உட்பட கூலிப்படைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, தொழிலாளர்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சமீபகாலமாக நடந்து வரும் தொடர் குற்ற சம்பவங்களே இதற்கு உதாரணமாக உள்ளன.
திருட்டு, கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்ற வாளிகள் பலர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற குற்றவாளிகள் பலருக்கு போலீசார் சிலரும் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதுமேலும் சாதாரண குற்ற வழக்குகளில் கைதானவர்கள், பின்பு, ரவுடிகளாக உருவெடுக்கின்றனர்.
பல்லடம் உட்கோட்டத்தில், பல்லடம், அவிநாசிபாளையம், மங்கலம், காமநாயக்கன்பாளையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட புகார்கள், வழக்குகளால் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். பல்லடம் உட்கோட்டத்தின் கீழ், 200க்கும் அதிகமான போலீசார் வேலை பார்க்கின்றனர். ஆனால் இங்கு ஏற்படும் குற்ற சம்பவங்களை கணக்கில் கொள்ளும்போது, போலீசார் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
மேலும், நீண்ட காலமாக ஒரே இடத்தில் வேலை பார்த்து வரும் போலீசார் சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதால், குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. சமீபத்தில் நடந்த கூலிப்படை தாக்குதல் சம்பவம், போலீசார் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் உட்கோட்டத்தில் போலீசார் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதுடன், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீசாரை, கூண்டோடு பணியிட மாற்றம் செய்யவும் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.